2016-06-28 13:59:00

இது இரக்கத்தின் காலம் : வேலிகள் அல்ல, பாலங்கள் அமைப்போம்


அண்ணனும், தம்பியும் அருகருகே இருந்த நிலங்களில் பயிரிட்டு வந்தனர். பல ஆண்டுகள் ஒற்றுமையாய் வாழ்ந்த இவ்விருவருக்கும் இடையே தோன்றிய ஒரு கருத்து வேறுபாடு, பெரும் சண்டையாக மாறியது. ஒரு நாள், தம்பி, ஒரு 'புல் டோச'ரின் உதவி கொண்டு, இரு நிலங்களுக்கும் இடையே, ஆழமான ஒரு பள்ளத்தை உருவாக்கினார்.

அடுத்தநாள், அண்ணன் வீட்டிற்கு ஓர் இளைஞர் வந்தார். தனக்கு தச்சு வேலை தெரியும் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவ்விளைஞர், ஏதாவது வேலை தரும்படி அண்ணனிடம் விண்ணப்பித்தார். அண்ணன் அவரிடம், "அதோ, அங்கு தெரிகிறதே, அது என் தம்பியின் வயல். அவனையோ, அவன் வயலையோ நான் பார்க்க விரும்பவில்லை. வீட்டுக்குப் பின்புறம் நான் அடுக்கிவைத்துள்ள கட்டைகளைக் கொண்டு, எனக்கும் அவனுக்கும் இடையே ஒரு உயரமான வேலியை எழுப்பிவிடு" என்று சொல்லிவிட்டு, அண்ணன் ஊருக்குள் சென்றார். இளையவரும் தன் வேலையைத் துவக்கினார்.

மாலையில் அண்ணன் வீடு திரும்பியபோது, அவருக்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. ஒரு வேலியை எழுப்புவதற்குப் பதில், இரு நிலங்களுக்கும் இடையே இருந்த பள்ளத்தை இணைத்து, ஒரு பாலத்தைச் கட்டியிருந்தார், இளையவர். அந்தப் பாலத்தின் மறுபுறம் வந்து நின்ற தம்பி, அண்ணனைப் பார்த்து, "அண்ணா, என்னை மன்னித்துவிடு. நான் இவ்வளவு செய்தும், நீ இந்த பாலத்தைக் கட்டியிருப்பது, உன் நல்ல உள்ளத்தைக் காட்டுகிறது" என்று கூறினார். அண்ணனும், தம்பியும் அந்தப் பாலத்தின் மீது ஒருவர் ஒருவரை தழுவிக் கொண்டனர்.

அவ்வேளையில், அண்ணனிடம் விடைபெற வந்த இளையவரிடம், அண்ணன், "இன்னும் சில நாட்கள் இங்கேயே தங்கும். நீங்கள் செய்யவேண்டிய பல பணிகள் இங்கே உள்ளன" என்று கூறினார். அதற்கு அந்த இளைஞன், "இங்கு தங்க எனக்கும் ஆசைதான். ஆனால், நான் கட்டி முடிக்கவேண்டிய பாலங்கள் இன்னும் பல உள்ளன" என்று சொன்னபடி, விடைபெற்றுச் சென்றார்.

வேலிகள் அல்ல, பாலங்கள் அமைக்க இரக்கத்தின் காலம் அழைப்பு விடுக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.