2016-06-26 12:14:00

கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாட்டில் திருத்தந்தையின் உரை


ஜூன்,26,2016. அனைத்து அர்மேனியரின் கத்தோலிக்கோஸ் அவர்களே, அரசுத் தலைவரே, அன்பு சகோதர, சகோதரிகளே, கிறிஸ்தவ நம்பிக்கையை முதன் முதலாக ஏற்றுக்கொண்ட  நாட்டைக் காண்பதற்கு நான் மிகவும் விரும்பினேன். உரோம் நகரிலிருந்து ஒரு திருப்பயணியாக நான் இங்கு வந்திருக்கிறேன். அர்மேனிய கிறிஸ்தவ சமூகத்தின் மீது கத்தோலிக்கத் திருஅவை கொண்டுள்ள மதிப்பையும், அன்பையும் வெளிப்படுத்த நான் வந்துள்ளேன்.

அண்மைய ஆண்டுகளில் கத்தோலிக்கத் திருஅவைக்கும், அர்மேனிய அப்போஸ்தலிக்க திருஅவைக்கும் இடையே அன்பு நிறைந்த சந்திப்புக்கள் அதிகரித்துள்ளன. நீங்கள் இதுவரை காட்டிவந்துள்ள துணிவான சாட்சியத்தைக் குறித்து, நான் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். நாம் இணைந்து நடந்து வந்துள்ள பாதை நீண்டது. நம் இணைந்த பயணம் இனியும் தொடர்ந்து, நாம் ஒரே திருவிருந்தில் பங்கேற்கும் முழுமையை நம்பிக்கையுடன் எதிர்நோக்குவோம்.

நாம் மேற்கொண்டுள்ள இந்தப் பயணத்தில் பலர் மறைசாட்சிகளாக நமக்கு முன் சென்றுள்ளனர். தங்கள் இரத்தத்தால் கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்த இவர்கள், இன்று நமக்கு விண்மீன்களாய் திகழ்கின்றனர்.

இவர்களில் புனிதமிக்க Catholicos Nerses Shnorhali அவர்களை குறிப்பிட விரும்புகிறேன். கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்ட அனைவரும் "ஒன்றாய் இருக்க வேண்டும்" (யோவான் 17:21) என்பதற்காக இப்புனிதர் அயராது உழைத்தார். இந்த ஒற்றுமையை வளர்க்க, நல் மனம் கொண்ட ஒரு சிலரின் ஆவல் மட்டும் போதாது, மாறாக, அனைவரின் முயற்சிகளும், செபங்களும் தேவை என்று புனித Nerses கூறியுள்ளார். நான் திருப்பீடத்தில் அப்பத்தையும், கிண்ணத்தையும் ஒப்புக் கொடுக்கும் வேளையில், அர்மேனிய திருஅவைக்கும், மக்களுக்கும் தவறாமல் செபிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

பழைய வரலாற்று நினைவுகளைக் குணமாக்க, நம்மிடையே அன்பும், நட்பும் வளரவேண்டும் என்று புனித Nerses கூறியுள்ளார். கிறிஸ்துவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, நம் கடினமான கருத்துக்களைத் தளர்த்தி, பணிவுடன் ஒருவர் ஒருவரை நெருங்கிவர, புனித Nerses வழிகாட்டியுள்ளார். முழுமையான ஒன்றிப்பு நோக்கி நாம் உறுதியான உள்ளத்துடன் பயணம் மேற்கொள்வோம்.

"அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி, உலகம் தரும் அமைதி போன்றது அல்ல" (யோவான் 14:27) என்ற வார்த்தைகளை, நற்செய்தியில் கேட்டோம். உலகம் பெற முடியாமல் தவிக்கும் அந்த அமைதியை நாம் பெற வேண்டும் என்று செபிப்போம்.

உண்மையான அமைதியைப் பெறுவதற்கு எத்தனையோ தடைகள் உள்ளன. மத்தியக் கிழக்குப் பகுதியில் நம் சகோதர சகோதரிகள் தொடர்ந்து சந்தித்து வரும் வன்முறைகளை நினைத்துப் பார்க்கிறேன். ஆயுத உற்பத்தியையும், வர்க்கத்தையும் வளர்ப்பதற்கு, அப்பாவி மக்களின் வாழ்க்கை பலியாகின்றது.

அர்மேனிய மக்கள், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் சந்தித்த "பெரும் கொடுமை"யை நினைத்துப் பார்க்கிறேன். பொருளற்ற இந்த மனிதப் பலிகள், நம் நினைவுகளிலும் மனங்களிலும் ஆழப்பதிந்து, வேதனையைத் தருகின்றன. இத்தகைய தீமைகள் இனி உலகில் நடக்கக் கூடாது என்பதற்கு, நீங்கள் அனுபவித்த கொடுமைகள், ஓர் எச்சரிக்கையாக அமையவேண்டும்.

அதே வேளையில், இந்தக் கொடிய வரலாற்றில், நீங்கள் காட்டிய கிறிஸ்தவ நம்பிக்கையைக் கண்டு நான் வியந்து பாராட்டுகிறேன். தன் உயிர்ப்பிற்குப் பின்னரும், உடலில் காயங்களைத் தாங்கி நிற்கும் இயேசுவைப்போல், நீங்களும், உங்கள் வரலாற்றுக் காயங்களைத் தாங்கி வருகிறீர்கள். ஆயினும், அவற்றை, மீட்பின் கருவிகளாக மாற்றியுள்ளீர்கள்.

பழிக்குப் பழி என்ற மாய வலையில் சிக்கியிருக்கும் இன்றைய உலகில், ஒப்புரவையும், அமைதியையும் நிலைநாட்டுவது நம் கடமை. அனைவருக்கும் மதிப்பு தரும் வேலை வாய்ப்பு, தேவையில் இருப்போரைப் பேணுதல், ஊழலை ஒழித்தல் போன்ற வழிகளில் நாம் இந்த அமைதியைக் கொணர முடியும்.

அன்பு இளையோரே, எதிர்காலம் உங்களுக்கு உரியது. உங்கள் முன்னோரின் பெரும் ஞானத்தைப் பயன்படுத்தி, உலகில் அமைதியை உருவாக்குபவர்களாக இருக்க முயலுங்கள். இறைவன் உங்கள் முயற்சிகளை ஆசீர்வதித்து, அர்மேனியா, துருக்கி நாடுகளுக்கிடையே ஒப்புரவையும், அமைதியையும் நிலை நாட்டுவாராக.

இந்நேரத்தில், கிறிஸ்துவின் அமைதியைக் கட்டியெழுப்ப பாடுபட்ட மற்றொரு உன்னத சாட்சியைக் குறிப்பிட விழைகிறேன். திருஅவையின் மறைவல்லுனர் என்று போற்றப்படும் நரேக் நகர் புனித கிரகோரி, "அமைதியின் மறைவல்லுனர்" என்றும் அழைக்கப்படுகிறார். அவர் எழுதிய வார்த்தைகள் இவையே: "இறைவா, எங்கள் பகைவர்களுக்கு மன்னிப்பையும், அருளையும் வழங்கியருளும். என்னைத் துன்புறுத்துவோரை, தண்டிக்க வேண்டாம், மாறாக, அவர்கள் திருந்தி வாழ வழி வகுத்தருளும். தீமைகளை இவ்வுலகிலிருந்து வேரறுத்து, என்னிலும், அவர்களிலும் நன்மையை வளர்த்தருளும்."  (Book of Lamentations, 83, 1-2) நரேக் நகர் புனித கிரகோரி, அனைத்து உலகிற்கும் பரிந்துபேசும் புனிதராகத் திகழ்ந்தார்.

உலகெங்கும் வாழும் அர்மேனியர்கள் அனைவரையும் நான் மனதால் அரவணைக்கிறேன். நீங்கள் அனைவரும் அமைதியின் தூதர்களாக வாழும்படி உங்களை ஊக்குவிக்கிறேன். நீங்கள் காட்டும் அமைதி வேட்கை, இவ்வுலகிற்கு ஒரு சாட்சியாகத் நிகழட்டும். Kha’ra’rutiun amenetzun! - உங்களுக்கு அமைதி உண்டாகுக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.