2016-06-26 13:28:00

Tiridate வளாகத்தில் அர்மேனிய அப்போஸ்தலிக்க திருவழிபாடு


ஜூன்,26,2016. ஜூன் 26, இஞ்ஞாயிறு அர்மேனியத் திருத்தூதுப் பயணத்தின் நிறைவு நாள். இந்நாள் காலை 7.30 மணிக்கு, Etchmiadzin திருப்பீட தூதரகத்தில், திருப்பீட தூதரோடு சேர்ந்து திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். அவ்வில்லத்தில் 9 மணியளவில், அர்மேனியாவின் 14 கத்தோலிக்க ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்களைச் சந்தித்தார். அந்நாட்டின் முப்பது இலட்சம் மக்களில் 93 விழுக்காட்டினர் அர்மேனிய அப்போஸ்தலிக்க சபைக் கிறிஸ்தவர்கள். கத்தோலிக்கர் சிறுபான்மையினரே. இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்கு, Etchmiadzin நகரின் புனித Tiridate வளாகத்தில் அர்மேனிய அப்போஸ்தலிக்க இறைவழிபாடு ஆரம்பமானது. இவ்வளாகத்தில் பொன்னிறமான குடையின்கீழ், திருத்தந்தையும், கத்தோலிக்கோஸ் அவர்களும் நடந்துவர, அவர்களைச் சுற்றி நறுமணத் தூபமிட்டுக்கொண்டே குருக்கள் வந்தனர். கத்தோலிக்கோஸ் 2ம் Karekin அவர்கள் தலைமையேற்று நடத்திய இவ்வழிபாட்டு மேடையில், அவரின் அருகே திருத்தந்தையும்  நின்று கொண்டிருந்தார். பாடல்கள் நிறைந்த இவ்வழிபாட்டில் முதலில் கத்தோலிக்கோஸ் 2ம் Karekin அவர்கள், அப்பம் பலுகிய புதுமையை மையப்படுத்தி மறையுரையாற்றினார். கீழை ஆர்த்தடாக்ஸ் சபைகளில் ஒன்றாகிய, அர்மேனிய தேசிய அப்போஸ்தலிக்கத் திருஅவை, இயேசுவின் திருத்தூதர்கள் பர்த்தலோமேயு, ததேயுஸ் ஆகிய இருவரால் முதல் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவ்வழிபாட்டிற்குப் பின்னர், Etchmiadzin திருப்பீட தூதரக இல்லத்தில், பல கிறிஸ்தவ சபையினருடன் மதிய உணவருந்தினார் திருத்தந்தை. அங்கிருந்து 41 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற Khor Virap துறவு மடத்திற்கு மாலை 3 மணிக்குச் சென்றார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.