2016-06-26 13:39:00

Khor Virap துறவு மடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூன்,26,2016. அர்மேனியாவின் Khor Virap துறவு மடத்திற்கு இஞ்ஞாயிறு மாலை 3 மணிக்குச் சென்றார் திருத்தந்தை. அர்மேனியர்களுக்கு மிக முக்கிய புனித இடங்களில் ஒன்றான இத்துறவு மடம், அரராத்து மலையடிவாரத்தில், துருக்கிக்கும், அர்மேனியாவுக்கும் எல்லையில் அமைந்துள்ளது. 1915ம் ஆண்டில், ஒட்டமான் பேரரசு நடத்திய படுகொலையை, இனப்படுகொலை என்று திருத்தந்தை கூறியதை முன்னிட்டு, துருக்கி இச்சனிக்கிழமையன்று கடும் விமர்சனத்தை வெளியிட்டது. ஆயினும், இத்துறவு மடத்தில் திருத்தந்தை அமைதிக்கு அழைப்பு விடுத்தார். இரு மாடப்புறாக்களையும் பறக்கவிட்டார். 1992ம் ஆண்டில் முழுவீச்சில் தொடங்கிய Nagorno-Karabakh குடியரசு குறித்த மோதலில், அஜர்பைஜானுக்கு ஆதரவாக, துருக்கி, அர்மேனியாவுக்கு எல்லைகளை மூடியது. இதனால் அர்மேனியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்துறவு மடத்தில் பேசிய திருத்தந்தை, இவ்விரு நாடுகளும் தங்களின் எல்லைகளில், சுவர்களை அல்ல, பாலங்களைக் கட்டுவதாக. எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதைப் பார்ப்பதற்கு விரும்புகிறேன் என்றார். கிறிஸ்துவே, எம் கடவுளே, வாழ்வை வழிநடத்துபவரும், அமைதியை அளிப்பவருமானவரே, எம் எல்லாருக்கும் நீதியைத் தாரும். உம் இரக்கத்தின் உதவியால் நாங்கள் வாழ்வு மற்றும் மீட்பை, அமைதியாக அடைவோம் எனச் செபித்தார் திருத்தந்தை. இத்துறவு மடம், அரசர் 3ம் Tiridate அவர்கள் மனம் மாறுவதற்கு முன்னர், அர்மேனியப் பாதுகாவலரான புனித கிரகரி 13 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்த இடமாகும். இவ்விடத்திற்கு, வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு வெள்ளிச் சிலுவையைப் பரிசாக அளித்தார் திருத்தந்தை. அர்மேனியத் திருஅவை அமைதியில் நடப்பதாக. நம் சபைகளுக்கிடையே ஒன்றிப்பு முழுமையடைவதாக என்ற டுவிட்டர் செய்தியையும், இஞ்ஞாயிறன்று வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறன்று இத்திருத்தூதுப் பயணத்தின் நிறைவில், அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவைக்கும், உரோமன் கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே உறவுகள் மேம்படுவதை வெளிப்படுத்தும் அறிக்கை ஒன்றில், திருத்தந்தையும், கத்தோலிக்கோஸ் அவர்களும் கையெழுத்திட்டு வெளியிட்டனர். திருத்தந்தையின் தலைமைத்துவம் குறித்து இவ்விரு சபைகளுக்கு இடையே பிரிவினைகள் இருந்தாலும், இவ்விரு சபைகளுக்கும் இடையே நல்ல உறவுகள் மேம்படுவதன் அடையாளமாக இத்திருத்தூதுப் பயணம் அமைந்துள்ளது. இந்த ஆர்த்தடாக்ஸ் சபையும், கத்தோலிக்கத் திருஅவையும் முழு ஒன்றிப்பை நோக்கிச் செல்ல, திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம் உதவுவதாக.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.