2016-06-25 16:12:00

அர்மேனிய அரசுத்தலைவர், அதிகாரிகள் சந்திப்பு


ஜூன்,25,2016. அர்மேனியத் திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் மாலையில், தலைநகர் எரேவானில் அரசுத்தலைவர் மாளிகையில், அரசுத்தலைவர் Serž Sargsyan அவர்களைத் தனியே சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்நாட்டின் பாதுகாவலரான புனித கிரகரியின் பதக்கத்தையும் திருத்தந்தைக்கு அளித்தார் அரசுத்தலைவர் Sargsyan. திருப்பீடத்துக்கும், அர்மேனியாவுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. இது குறுகிய காலம் என்றாலும், 2001ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் மேற்கொண்ட திருப்பயணத்திற்குப் பின்னர் நிறையக் காரியங்கள் நடந்துள்ளன என்று திருத்தந்தையிடம் கூறினார் அரசுத்தலைவர் Sargsyan. திருத்தந்தையும் அர்மேனியாவுக்குத் தன்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்தார். பின்னர் அந்த மாளிகையில் அர்மேனிய அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், சமூகக் குழுக்களின் பிரதிநிதிகள் என ஏறக்குறைய 250 பேரைச் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை. அர்மேனியா, அடக்குமுறையை அறிந்துள்ளது, 20ம் நூற்றாண்டின் முதல் படுகொலையை அனுபவித்துள்ளது. முதல் மறைசாட்சிகளையும்விட, இக்காலக் கிறிஸ்தவர்கள் சில இடங்களில், விசுவாசத்திற்காக, பாகுபாடுகளையும், அடக்குமுறைகளையும் அனுபவிக்கின்றனர் என்றார் திருத்தந்தை. இச்சந்திப்பை நிறைவு செய்து, அங்கிருந்து 16 கிலோ மீட்டர் தூரம் காரில் Etchmiadzin சென்று, அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவைத் தலைவரைச் சந்தித்தார் திருத்தந்தை. அம்மாளிகையில் விருந்தினர் புத்தகத்திலும் கையெழுத்திட்டார். மிகுந்த மகிழ்வோடு இங்கிருக்கிறேன். கிறிஸ்தவ ஒன்றிப்பை நோக்கிய நம் பயணத்தையும், அர்மேனியாவையும் ஆண்டவர் ஆசீர்வதிக்கச் செபிக்கிறேன் என்று எழுதினார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு கனவு நனவாக நாமும் திருத்தந்தையுடன் சேர்ந்து செபிப்போம். இந்த மூன்று நாள் திருத்தூதுப் பயணம் இஞ்ஞாயிறன்று நிறைவடையும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.