2016-06-25 15:49:00

Tzitzernakaberd நினைவிடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்


ஜூன்,25,2016. "இந்த இடத்தில் என் மனதில் மிகுந்த வேதனையுடன் செபிக்கின்றேன். இத்தகைய பெருந்துன்பம் இனிமேல் ஒருபோதும் நிகழக் கூடாது, மனித சமுதாயம் இதை ஒருபோதும் மறக்கக் கூடாது, நன்மையால் தீமையை எப்படி வெல்வது என்பதை மனித சமுதாயம் அறிந்துகொள்ளும்". இவ்வாறு, அர்மேனிய இனப்படுகொலை நினைவிடத்தில் விருந்தினர் புத்தகத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதினார் திருத்தந்தை பிரான்சிஸ். "அர்மேனிய மக்களின் நினைவை இறைவன் பாதுகாப்பாராக. நினைவு ஒருபோதும் அழிக்கப்படவோ, மறக்கப்படவோ கூடாது. நினைவு, அமைதி மற்றும் வருங்காலத்தின் ஊற்றாகும். தனிநபர்களைப் போன்று மக்களுக்கும் நினைவுகள் உண்டு. உங்கள் மக்களின் நினைவு பழமையானது மற்றும் விலைமதிப்பற்றது" என்றும் எழுதினார் திருத்தந்தை. அர்மேனிய நாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாளாகிய இச்சனிக்கிழமை, உள்ளூர் நேரம் காலை 8.30 மணிக்கு, அதாவது இந்திய நேரம் காலை பத்து மணிக்கு, Etchmiadzin நகரின் அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவைத் தலைமையகத்திலிருந்து 21 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் Tzitzernakaberd நினைவிடத்திற்கு காரில் புறப்பட்டார் திருத்தந்தை. Tzitzernakaberd நினைவிடம், துருக்கியின் ஒட்டமான் பேரரசால், 1915க்கும் 1917ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஆறு இலட்சம் முதல் 15 இலட்சம் அர்மேனியர்கள் வரை படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் இடமாகும். இப்படுகொலை நடத்தப்பட்டதன் எண்பதாம் ஆண்டு நிறைவாக, 1967ம் ஆண்டில் இவ்விடம் அமைக்கப்பட்டது. இது, அந்நாட்டின் 12 மாநிலங்களைக் குறிக்கும் விதமாக, 12 உயர்ந்த தூண்களைக் கொண்டுள்ளது. வட்டவடிவ குன்றின்மீது எழுப்பப்பட்டுள்ள இவ்விடத்திற்கு வந்த திருத்தந்தை, மலர் வளையம் வைத்து, சிரம் தாழ்த்தி அமைதியில், உருக்கமாகச் செபித்தார். அங்கிருந்த அணையாச் சுடரின் முன்பாக திருத்தந்தை செபித்தபோது, குருக்கள் தூபமிட்டுக்கொண்டிருந்தனர். பாடகர் குழு பாடியது. இந்நிகழ்வில், சக்கர நாற்காலியில் இருந்த சில சிறாரும் இருந்தனர். அர்மேனியப் படுகொலை “பெரும் தீமை” என்றும் அழைக்கப்படுகின்றது.

 "பறவைகளின் குன்று(Hill of the Swallows)" எனப்படும் Tzitzernakaberd நினைவிடத்தில், இத்தாலியத்தில் சிறிய செபம் ஒன்றைச் சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்துவே, அர்மேனியர்களின் புனிதர்களை முடிசூட்டுபவரே, அவர்களின் விசுவாச விருப்பத்தை நிறைவேற்றுபவரே, அவர்களை அன்போடும் கனிவோடும் நோக்குகிறீர். எங்களின் விண்ணப்பத்தைக் கேட்டருளும். எங்கள் மீது இரக்கம் வையும், எங்கள் பாவங்களை மன்னித்தருளும். இறைத்தந்தையுடனும், தூய ஆவியாருடனும் சேர்ந்து நன்றியுள்ள இதயங்களுடன் உம்மை மகிமைப்படுத்த எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கும் எனச் செபித்தார் திருத்தந்தை.

பின்னர் அர்மேனிய அரசுத்தலைவர் Serge Sarkisian,  அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவைத் தலைவர் 2ம் Karekin ஆகியோருடன் அந்நினைவிடத்தின் பெரிய பூங்காவை, சிறிய திறந்த வாகனத்தில் சுற்றிப் பார்த்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது ஓரிடத்தில் நின்று, இந்நினைவிடத்திற்கு வந்ததன் நினைவாக, ஒரு மரத்தை ஆசீர்வதித்து, அதற்குத் தண்ணீர் ஊற்றினார். அர்மேனியப் படுகொலையின்போது துன்புறுத்தப்பட்டு உயிர்பிழைத்தவர்களின் வாரிசுகள் அவ்விடத்தின் கீழ்தளத்தில் திருத்தந்தைக்காகக் காத்திருந்தனர். அவர்களை ஆசீர்வதித்தார் திருத்தந்தை. அந்தப் பெருந்தீமையில் காப்பாற்றப்பட்ட 400 சிறார் அக்காலத்தில், திருத்தந்தை 11ம் பத்திநாதர் அவர்களால், காஸ்தெல் கந்தோல்ஃபோவில் பல மாதங்கள் விருந்தினர்களாகவும் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தந்தை 11ம் பத்திநாதர்,  திருத்தந்தை 15ம் பெனடிக்ட் ஆகிய இருவரும், ஒட்டமான் படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டுமென, சுல்தானுக்கு விண்ணப்பித்திருந்தனர். Tzitzernakaberd நினைவிடத்தில் செபித்து, விருந்தினர் புத்தகத்தில் கையெழுத்திட்ட பின்னர், அங்கிருந்து 19 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கின்ற எரேவான் விமான நிலையத்திற்குக் காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.