2016-06-25 15:59:00

Gyumri நகர் Vartanans வளாகத்தில் திருப்பலி


ஜூன்,25,2016. எரேவான் விமான நிலையத்திலிருந்து ஆல் இத்தாலியா A321 விமானத்தில் Gyumri நகரின் Shirak பன்னாட்டு விமான நிலையத்தை திருத்தந்தை சென்றடைந்தபோது உள்ளூர் நேரம் இச்சனிக்கிழமை காலை 8.35 மணியாகும். இந்திய நேரம் பிற்பகல் 2 மணி 5 நிமிடங்களாகும். Gyumri, வடமேற்கு அர்மேனியாவில், குன்றுகளும், அழகான காட்டு மலர்களும் நிறைந்த நகரமாகும். இது அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமுமாகும். கிறிஸ்தவத்தின் தொட்டிலாக நீண்ட காலமாக விளங்கி வரும் இந்நகரத்தில், கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து மக்கள் வாழ்ந்து வருவதாக அகழ்வராய்ச்சிகள் கூறுகின்றன. Shirak பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவைத் தலைவர் 2ம் Karekin அவர்களுடன் காரில் Gyumri நகரின், Vartanans வளாகம் சென்றார் திருத்தந்தை. அங்குக் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் காரில் வலம் வந்து திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை. இந்த மூன்று நாள் அர்மேனியத் திருப்பயணத்தில், திருத்தந்தை பொதுவில் நிகழ்த்திய திருப்பலி இது மட்டுமேயாகும். இறைஇரக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இத்திருப்பலியை, இத்தாலியம் மற்றும் அர்மேனிய மொழிகளில் நிறைவேற்றினார் திருத்தந்தை. இத்திருப்பலியின் ஆரம்பத்தில், அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவைத் தலைவர் 2ம் Karekin அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். 1988ம் ஆண்டில், அர்மேனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில், வீடுகளை இழந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, கத்தோலிக்கத் திருஅவை, உடன்பிறப்பு அன்புணர்வில் ஆற்றிய இடர்துடைப்புப் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார் கத்தோலிக்கோஸ் 2ம் Karekin. திருப்பலி தொடர்ந்து நடந்தது. அர்மேனியர்கள், கடும் துன்ப நேரங்களிலும் கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாயிருந்ததற்குத் தனது மரியாதையைச் செலுத்தும் நோக்கத்தில் Gyumri சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியின் இறுதியில் எல்லாருக்கும் நன்றி தெரிவித்தார் திருத்தந்தை.

இச்சனிக்கிழமை மாலையில், அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவைப் பேராலயத்தைப் பார்வையிடுதல், எரேவானில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு ஆகியவை இப்பயணத் திட்டத்தில் இருந்தன. மேலும், இச்சனிக்கிழமையன்று, இந்தியாவின் குண்டூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி Bhagyaiah Chinnabathini அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.