2016-06-24 16:30:00

திருத்தந்தையின் அர்மேனியப் பயணம் : ஒரு முன்தூது


ஜூன்,24,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூன்று நாள் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டுவரும் அர்மேனியா, திருவிவிலியத்தில் இருமுறை இடம்பெற்றுள்ள விவிலியப் பூமியாகும். பெருவெள்ளம் ஏற்பட்டு, நூற்றைம்பதாம் நாள் முடிவில், வெள்ளம் வடிந்தது. அப்போது நோவாவின் பேழை, அரராத்து மலைத்தொடர் மேல் தங்கியது (தொ.நூ.8,4) என்று தொடக்க நூலிலும், எருசலேமின் வீழ்ச்சி பற்றி எரேமியா இறைவாக்கினர் கூறுகையில், அரராத்து மின்னி... அரசுகளுக்கு அழைப்பு (எரே.51.27) விடுங்கள் என்பதையும் எரேமியா நூலிலும் வாசிக்கிறோம். அர்மேனியாவின் வரலாற்றில் மையமாக விளங்குவது அரராத்து மலைத்தொடர். நோவா திராட்சைத்தோட்டம் பயிரிட்டு மது தயாரித்தார், மது போதையில் இருந்தார் என்று விவிலியத்தில் வாசிக்கிறோம். அர்மேனியா நாடு, இன்றும் திராட்சை மதுவுக்குப் பெயர்போனது. Eurasian வின் Caucasus பகுதியின் தெற்கில் அமைந்துள்ள அர்மேனியா, பல கட்சி ஆட்சியமைப்பைக் கொண்ட ஒரு குடியரசு நாடாகும். மேற்கு ஆசியாவில் முழுவதும் நிலத்தால் சூழப்பட்டுள்ள இந்நாட்டிற்கு மேற்கே துருக்கியும், வடக்கே ஜார்ஜியாவும், கிழக்கே தனி நாடாக அறிவித்த Nagorno-Karabakhம், அஜர்பைஜானும், தெற்கே ஈரானும் எல்லைகளாக உள்ளன. இந்நாட்டின் பெரும்பகுதி மலைகளைக் கொண்டுள்ளது. இங்கு வேகமாகப் பாயும் நதிகள் உள்ளன. காடுகள் அதிகம் இல்லை.

நான்காயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட இந்நாடு, முதல் நூற்றாண்டில், பேரரசர் பெரிய Tigranes அவர்களின் ஆட்சியில், உச்சத்தைத் தொட்டிருந்தது. வரலாற்றில் கிறிஸ்தவத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்ற முதல் நாடும் அர்மேனியா. உரோமைப் கலேரியுஸ் காலத்தில், கிறிஸ்தவம் சகித்துக்கொள்ளக் கூடிய மதமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னரும், உரோமைப் பேரரசர் கான்ஸ்ட்டைன் கிறிஸ்தவராக, திருமுழுக்குப் பெற்ற 36 ஆண்டுகளுக்கும் முன்னருமே, அர்மேனியா கிறிஸ்தவ நாடாக மாறி விட்டது. இது கி.பி.301ம் ஆண்டில் இடம்பெற்றது. இந்நாட்டில் 93 விழுக்காட்டினர் அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவையைச் சேர்ந்தவர்கள். கத்தோலிக்கர் 10 விழுக்காட்டினர். யஜிதிகள் மற்றும் பிற மதத்தவர் நான்கு விழுக்காட்டினர். நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி அர்மேனியம். இரஷ்யம் பேசும் மக்களும் உள்ளனர். திருவிவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்ட மொழிகளில் அர்மேனிய மொழியும் ஒன்றாகும். இந்நாட்டின் 29,743 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், 31 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். ஆண்களின் சராசரி ஆயுள்காலம் 71 ஆண்டுகள், பெண்களின் சராசரி ஆயுள்காலம் 77 ஆண்டுகள். வைரம், தொழில்கருவிகள், உணவுப்பொருள்கள் ஆகியவை இந்நாட்டின் முக்கிய ஏற்றுமதிகளாகும்.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளைவிட பழமையான வரலாற்றைக் கொண்டிருக்கும் அர்மேனியா, மாபெரும் சில்க் பாதை வழியே, எண்ணற்ற கலாச்சாரங்கள் மற்றும் பேரரசுகளின் தாக்கத்தைக் கொண்டிருக்கின்றது. 1991ம் ஆண்டில் முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து சுதந்திர நாடாக மாறிய பின்னர், அர்மேனிய மொழி பேசும் மக்களை அதிகமாகக் கொண்ட Nagorno-Karabakh பகுதி குறித்து, அஜர்பைஜான் நாட்டுடன் இரத்தம் சிந்தும் மோதலில் ஈடுபட்டது. தற்போது திருத்தந்தையின் இப்பயண நேரத்தில், அர்மேனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளின் தலைவர்கள் இப்பகுதி குறித்து அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த இசைவு தெரிவித்துள்ளனர். பழங்கால கிறிஸ்தவக் கலாச்சாரங்களைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாகிய அர்மேனியாவில், 4ம் நூற்றாண்டில் அதன் முதல் ஆலயங்கள் கட்டப்பட்டன. அடுத்தடுத்த நூற்றாண்டுகளில், இந்நாடு, Byzantine, பெர்சியன், மங்கோலியன் பேரரசுகளின் கீழ் இயங்கியது. பின்னர் துருக்கியின் ஒட்டமான் பேரரசு இதனை ஆட்சி செய்தது.

முதல் உலகப் போரின்போது, 1915க்கும் 1917க்கும் இடைப்பட்ட காலத்தில், ஒட்டமான் பேரரசால், ஆறு இலட்சம் முதல் 15 இலட்சம் அர்மேனியர்கள் வரை படுகொலை செய்யப்பட்டனர் அல்லது தற்போதைய சிரியா நாடாகிய அன்றைய Anatoliaவுக்கு, நாடு கடத்தப்பட்டபோது இறந்தனர். இது இரண்டு கட்டமாக இடம் பெற்றது. முதலில், வலுவாக இருந்த அர்மேனிய ஆண்கள், படுகொலை செய்யப்பட்டனர். அடுத்த கட்டமாக, இராணுவத்தினரின் மேற்பார்வையில், பெண்கள், சிறார், வயது முதிர்ந்தோர், மற்றும் நோயாளர்கள் சிரியா பாலைவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்பயணத்தில், இவர்களுக்கு உணவு, தண்ணீர் மறுக்கப்பட்டன. திருட்டு, பாலியல் வன்செயல் மற்றும் கொலைகளும் நடத்தப்பட்டன. மேலும், 235 முதல் 270 அர்மேனிய அறிவாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள், கான்ஸ்டான்டிநோபிளிலிருந்து அங்காராவுக்கு அனுப்பப்பட்டனர். இவர்களில் பெரும்பகுதியினர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அர்மேனியர்கள் கொல்லப்பட்டது, 20ம் நூற்றாண்டில் நடந்த முதல் இனப்படுகொலை என்றும் சொல்லப்படுகிறது.  அர்மேனியா இதனை படுகொலை என்று கூறும்வேளை, துருக்கி இதனை ஏற்கவில்லை.

முதல் உலகப் போரில் ஒட்டமான் பேரரசு தோல்வியடைந்ததையடுத்து 1918ம் ஆண்டில் அர்மேனியா சுதந்திர நாடாகியது. 1922ம் ஆண்டில் சோவியத் யூனியனோடு இணைக்கப்பட்டது. 2009ம் ஆண்டில் துருக்கிக்கும், அர்மேனியாவுக்கும் இடையே தூதரக உறவுகள் சமுகமாகும் வழிகள் ஏற்கப்பட்டன. 2015ம் ஆண்டில், இரஷ்யா தலைமையிலான Eurasian கழகத்தில் அர்மேனியா இணைந்தது.

அர்மேனியத் தலைநகர் Yerevan, கி.மு. 782ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்நகரத்தில் அந்நாட்டின் 35 விழுக்காட்டு மக்கள் வாழ்கின்றனர். Hrazdan நதிக்கரையில் அமைந்துள்ள இந்நகரம், கடல் மட்டத்திற்கு மேல், ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ளது. அர்மேனிய நாட்டின் நிர்வாக, கலாச்சார மற்றும் தொழிற்சாலை மையமான இந்நகரம், அந்நாட்டின் பெரிய நகரமாகவும், அர்மேனிய வரலாற்றில் 1918ம் ஆண்டிலிருந்து 13வது தலைநகரமாகவும், உலகில், மக்கள் தொடர்ந்து வாழ்கின்ற பழமையான நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்நகரம், அரராத்து மலைப்பகுதியில் அமைந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.