2016-06-24 16:24:00

திருத்தந்தையின் அர்மேனியத் திருத்தூதுப் பயணம் : முதல் நாள்


ஜூன்,24,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்மேனிய நாட்டுக்கானத் தனது முதல் திருத்தூதுப் பயணத்தை இவ்வெள்ளி காலை 9.21 மணிக்குத் தொடங்கினார். ஆல் இத்தாலியா A321 விமானத்தில், உரோம் ஃபியூமிச்சினோ விமான நிலையத்திலிருந்து அர்மேனியத் தலைநகர் Yerevanக்குப் புறப்பட்ட திருத்தந்தை, இத்தாலி, குரோவேஷியா, போஸ்னியா-எர்செகொவினா, மொந்தேநெக்ரோ, செர்பியா, பல்கேரியா, துருக்கி, அர்மேனியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்குத் தனது செபத்தையும், ஆசீரையும் தெரிவிக்கும் தந்திச் செய்திகளையும் அனுப்பினார். வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னரும், அதை நிறைவு செய்த பின்னரும், உரோம் நகர் மேரி மேஜர் பசிலிக்கா சென்று, Salus Populi Romani அன்னைமரியாவிடம் செபிப்பதை திருத்தந்தை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அர்மேனியாவுக்கு அவர் மேற்கொண்டுள்ள இந்த 14வது திருத்தூதுப் பயணத்தை முன்னிட்டு, இவ்வியாழன் மாலையில் Salus Populi Romani அன்னைமரியாவிடம் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். Yerevanக்குச் சென்ற இந்த நான்கு மணி நேர விமானப் பயணத்தின் ஆரம்பத்தில், அவருடன் பயணம் செய்த பத்திரிகையாளர்களின் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை. ஏறக்குறைய எழுபது பத்திரிகையாளர் அவருடன் பயணம் செய்தனர். இத்தனை பேர் முன்பாக நின்று பேசுவது கடினம், முதுகைக் காட்டிப் பேசுவதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள், வானதூதர்களுக்குத்தான் முதுகு இருக்காது என்று சொல்வார்கள் என்று அவர்களிடம் கூறி, அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தி, பயணத்தைத் தொடர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த அர்மேனியத் திருத்தூதுப் பயணத்தில் ஏறத்தாழ 600 பத்திரிகையாளர்கள் பணிசெய்வார்கள் என்றும் திருத்தந்தையிடம் கூறினார் அருள்பணி லொம்பார்தி.  

இவ்வெள்ளி உள்ளூர் நேரம் மாலை மூன்று மணிக்கு, Yerevan நகரின் Zvartnots விமான நிலையம் சென்றடைந்தார் திருத்தந்தை. இந்த விமான நிலையம், கடல்மட்டத்திற்கு ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு, அர்மேனிய அரசுத்தலைவர் Serge Sarkisian, அவரது துணைவியார், அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவைத் தலைவர் 2ம் Karekin, திருப்பீடத் தூதர், கத்தோலிக்க ஆயர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் திருத்தந்தையை வரவேற்றனர். அந்நாட்டின் நல்வரவேற்பு மரபுப்படி, இரு சிறார் ரொட்டியையும் உப்பையும் திருத்தந்தைக்குக் கொடுத்தனர். சிறார் குழு ஒன்று விமான நிலையத்தில் திருத்தந்தையை வரவேற்றுப் பாடியது. அரசு வரவேற்பு நிகழ்வுக்குப் பின்னர், அங்கிருந்து, 12 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவையின் Etchmiadzin மாளிகைக்குக் காரில் சென்றார் திருத்தந்தை. திருத்தந்தையின் இப்பயண நிகழ்வுகள் அனைத்திலும்,  அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவைத் தலைவரும் உடன் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வழியெங்கும் மக்கள் வெள்ளம் ஆர்ப்பரித்து கைகளைத் தட்டி வரவேற்பளித்தனர்.    

Etchmiadzin அர்மேனிய அப்போஸ்தலிக்க மாளிகை சென்று, அத்திருஅவையின்  பேராலயத்தைப் பார்வையிட்டுச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு நடந்த திருவழிபாட்டில் முதலில், அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவைத் தலைவர் 2ம் Karekin அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். அர்மேனியா, கிறிஸ்தவ நாடானதன் 1700ம் ஆண்டு நிறைவையொட்டி, 2001ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் இந்நாட்டிற்குத் திருப்பயணம் மேற்கொண்டதை நினைவு கூர்கிறேன். புனித பேதுரு திருஅவையிலிருந்து ஒரு திருத்தந்தை அர்மேனியாவுக்கு வந்தது அதுவே முதன்முறையாகும். அதுவே இவ்விரு திருஅவைகளுக்கும் இடையே சகோதரத்துவ ஒத்துழைப்பு ஏற்பட புதிய தூண்டுதலாக அமைந்தது. இந்த உறவை வலுப்படுத்த, திருத்தந்தையே, தாங்களும் குறிப்பிடத்தக்க நல்தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள். இத்திருப்பயணம்  நமது இந்த உறவைப் புதுப்பிப்பதற்கு மேலும் ஒரு வாய்ப்பாக உள்ளது. அர்மேனியாவின் விவிலியப் பூமிக்குத் தங்களை வரவேற்கிறேன் என்று உரையாற்றினார்.    

பின்னர் திருத்தந்தையும், அந்நாட்டுக்கான தனது முதல் உரையை வழங்கினார்.

இவ்வுரையை நிறைவு செய்த திருத்தந்தை, Etchmiadzin அர்மேனிய அப்போஸ்தலிக்க மாளிகை சென்றார். பின்னர், Yerevanல், அரசுத்தலைவர் மாளிகையில் அரசுத்தலைவரைச் சந்தித்தல், அம்மாளிகையில் அரசு மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு உரை, அப்போஸ்தலிக்க மாளிகையில் கத்தோலிக்கோஸ் அவர்களைச் சந்தித்தல் ஆகிய நிகழ்வுகள் இம்முதல் நாள் பயணத் திட்டத்தில் இருந்தன. அர்மேனியாவுக்கு திருத்தந்தை மேற்கொண்டுவரும் திருத்தூதுப் பயணம் “முதல் கிறிஸ்தவ நாட்டைப் பார்வையிடுதல்”என்ற விருதுவாக்கைக் கொண்டுள்ளது.  நற்செய்தியின் ஊழியராகவும், அமைதியின் தூதுவராகவும், அர்மேனியரின் சகோதரராகவும் அர்மேனியாவுக்குச் செல்வதாக அறிவித்துள்ள திருத்தந்தையின் இத்திருத்தூதுப்பயணம், அக்கிறிஸ்தவ நாட்டு மக்கள் தங்கள் விசுவாசத்தில் இன்னும், ஆழமாக, உறுதியாக வாழ உதவுவதாக

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.