2016-06-24 16:55:00

காணாமல் போனோர் குறித்த அலுவலகம் அமைக்க பரிந்துரை


ஜூன்,24,2016. காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகத்தை அமைப்பதற்கான சட்ட வரைவு பரிந்துரையை இலங்கை அரசு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

இப்பரிந்துரை வழியாக அமைக்கப்பட உள்ள  அலுவலகத்தின் மூலம், காணாமல் போனோரை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் அவர்களின் உறவினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என இந்த சட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழ்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும்,   காணாமல் போன நபர் உயிரோடு இருந்தால், அதனை அவரது உறவினர்களுக்கு அறிவிப்பதற்கும், இந்த அலுவலகம் நடவடிக்கை எடுக்கும்.

காணாமல் போனோர் தொடர்பான புதைகுழிகள் குறித்து உறுதியான ஆதாரங்கள் இருந்தால் அதனைத் தோண்டும்படி உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றங்களிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் அதிகாரமும் சட்ட மூலத்தின் அடிப்படையில் இந்த அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தின் தலைமையகம் கொழும்பில் அமைக்கப்பட உள்ள நிலையில், பிராந்திய அலுவலகங்களை அமைப்பதற்கும் இந்த சட்ட மூலத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஆளும் கட்சியின் அமைப்பாளரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல அவர்கள், இந்த சட்ட வரைவை மேலும் ஆராய்வதற்கு சட்ட மூலங்கள் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்றக் குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அதன்பின்னர் அது விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமென்றும் கூறினார். 

ஆதாரம் : BBC /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.