2016-06-23 15:28:00

மறைக்கல்வியுரை மேடையில் திருத்தந்தையுடன் புலம்பெயர்ந்தவர்கள்


ஜூன்,23,2016. கிறிஸ்தவர்கள், தங்களின் துன்புறும் சகோதர சகோதரிகளை ஒதுக்க வேண்டாம், ஆனால் அவர்களை வரவேற்குமாறு, இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்பொது மறைக்கல்வியுரையில் கலந்துகொண்ட பல்வேறு நாடுகளின் 14 இளம் புலம்பெயர்ந்தவர்களை மேடைக்கு அழைத்துச் சென்று, தனக்கு அருகில் அமர வைத்திருந்த திருத்தந்தை, புலம்பெயர்ந்தவர்களை ஒதுக்க வேண்டாம் என விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார்.

இந்தப் புலம்பெயர்ந்தவர்கள் ஆப்ரிக்கா, ஆசியா, சிரியா, ஈராக் உட்பட, பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களை, இத்தாலியின் பிளாரன்ஸ் நகர் காரித்தாஸ் மற்றும் ஐரோப்பிய பல்கலைக்கழகம் இந்நிகழ்வுக்கு அழைத்து வந்திருந்தன.

ஏராளமான புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் நாடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறியவர்கள் என்றும், தங்கள் நாடுகளிலே இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என, இவர்களில் பலர் நினைக்கின்றனர், ஆனால், அந்நாடுகளில் இவர்கள் அவ்வளவு துன்பங்களை அனுபவித்தவர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.

மேலும், இப்புதன் பொது மறைக்கல்வியுரையில், TUFF FC என்றழைக்கப்படும் மதங்களின் ஒன்றிப்பு கால்பந்து கழகத்தின் இளம் மாணவர்களும் கலந்துகொண்டு திருத்தந்தையின் ஆசீர் பெற்றனர். பல்வேறு மத, இன மற்றும் சமூகப் பின்னணிகளைக் கொண்டவர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்தில், இக்கழகம் இலண்டனில் தொடங்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.