2016-06-23 15:33:00

மத்தியதரைக் கடல் பகுதியில் வெளியில் தெரியாத பெருந்துன்பங்கள்


ஜூன்,23,2016. குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகின்றதெனவும், மத்தியதரைக் கடல் மற்றும் இத்தாலியின் மத்திய பகுதிகளின் சில இடங்களில் இவர்கள், வெளிப்படையாய்த் தெரியாதப் பெருந்துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் எனவும் யூனிசெப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யாருடைய துணையுமின்றி வருகின்ற சிறாரின் எண்ணிக்கை கவலை தருவதாக உள்ளது எனவும், இவ்வெண்ணிக்கை அதிகரித்து வருகின்றதெனவும், அனைவரின் பார்வையும் கிரேக்க நாட்டின்மீது இருக்கும்வேளை, இந்தச் சிறார், மத்தியதரைக் கடலின் மத்திய பகுதிகளில் மௌனமாகத் துன்பங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் யூனிசெப் அதிகாரி Sarah Crowe அவர்கள் கூறினார்.

யூனிசெப் நிறுவனத்தின் புதிய அறிக்கை பற்றிக் கூறிய Crowe அவர்கள், இச்சிறார் எங்கிருந்து வருகின்றனர் என்பது முக்கியமல்ல, ஆனால் இவர்களுக்குப் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

துருக்கியுடன் ஐரோப்பிய ஒன்றியம் செய்துகொண்ட அண்மை உடன்பாட்டிற்குப் பின்னர், மத்தியதரைக் கடல் பகுதியில் ஆறு மாதங்களில் மட்டும் 2,430 பேர் இறந்துள்ளனர் என்று கூறினார் Crowe.

2015ம் ஆண்டில், 1,30,000த்துக்கு மேற்பட்ட குடியேற்றதாரர் மத்தியதரைக் கடல் வழியாகப் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.

ஆதாரம் : Romereports / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.