2016-06-23 14:57:00

அர்மேனிய நாட்டுத் திருத்தூதுப் பயணத்திற்காகச் செபியுங்கள்


ஜூன்,23,2016. “எனது அர்மேனிய நாட்டுத் திருத்தூதுப் பயணத்தில் உங்கள் செபங்களுடன் என்னோடு உடன்வாருங்கள்”என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வியாழனன்று வெளியாயின.

மேலும், இத்தாலிக்கு வெளியேயான தனது 14வது திருத்தூதுப் பயணத்தை, இவ்வெள்ளி காலை 9 மணிக்கு உரோம் ஃபியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து தொடங்குகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நான்கு மணி நேரம் விமானப் பயணம் செய்து, அர்மேனிய நாட்டுத் தலைநகர் Yerevanஐ இவ்வெள்ளி உள்ளூர் நேரம் மாலை மூன்று மணிக்குச் சென்றடையும் திருத்தந்தை, அந்நாட்டில் மூன்று நாள் பயண நிகழ்வுகளை நிறைவு செய்து, ஜூன் 26, வருகிற ஞாயிறு இரவு 8.40 மணிக்கு உரோம் சம்ப்பினோ விமான நிலையம் வந்து சேர்வார்.

இன்னும், இத்திருத்தூதுப் பயணத்தை முன்னிட்டு, அர்மேனிய நாட்டு மக்களுக்கு காணொளிச் செய்தி ஒன்றை இப்புதன் மாலையில் அனுப்பியுள்ள திருத்தந்தை, நற்செய்தியின் ஊழியராகவும், அமைதியின் தூதுவராகவும் அந்நாட்டுக்குத் தான் வருகை தருவதாகத் தெரிவித்துள்ளார்.

இத்தாலிய மொழியில் பேசியுள்ள திருத்தந்தை, அர்மேனியர்கள் அமைதிக்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் ஆதரவளிக்கவும், நம்பிக்கையை உருவாக்கும் ஒப்புரவு பாதையில் அந்நாட்டினரின் நடவடிக்கைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆவலுடனும் இப்பயணத்தை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“முதல் கிறிஸ்தவ நாட்டைப் பார்வையிடுதல்” என, இத்திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்குச் சொல்வதுபோல், இந்த யூபிலி ஆண்டில், திருப்பயணியாக, உங்கள் மக்களின் தொன்மையான ஞானத்தைப் பெற்று, உங்கள் விசுவாசத்தின் ஊற்றுகளில் என்னை ஆழ்த்துவதற்கு வருகிறேன் என்றும் தனது காணொளிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உங்களின் விசுவாசம், கற்களில் பொறிக்கப்பட்ட உங்களின் பிரபலமான சிலுவைகளாக, உறுதியாக உள்ளது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, உங்கள் நாட்டின் பெரிய புனிதர்கள், குறிப்பாக, புனித Narek கிரகரி இந்தப் பயணத்தை ஆசீர்வதிப்பார்களாக என்றும் தெரிவித்துள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.