2016-06-22 16:01:00

மறைக்கல்வி உரை : நம் இதயங்களைத் தூய்மைப்படுத்துகிறது இரக்கம்


ஜூன்,22,2016. கடந்த வாரம் தன் யூபிலி மறைக்கல்வி உரையில், விழியிழந்த ஒருவருக்கு எரிக்கோ செல்லும் வழியில் பார்வையை வழங்கிய இயேசுவின் புதுமையில் வெளிப்படுத்தப்பட்ட இறை இரக்கம் குறித்து விவரித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், இரக்கம் என்பது நம் இதயங்களைத் தூய்மைப்படுத்துகிறது என்ற மையக்கருத்துடன் உரை வழங்கினார்.

அன்பு சகோதர சகோதரிகளே, யூபிலி ஆண்டு மறைக்கல்வி உரையின் தொடர்ச்சியாக இன்று நாம், தொழுநோயாளர் ஒருவரை இயேசு குணமாக்கிய புதுமை குறித்து நோக்குவோம் (லூக். 5:12-14).  அக்காலத்தில் தொழுநோயாளர்கள் தீட்டுப்பட்டவர்களாக நோக்கப்பட்டதும், அவர்கள் ஏனையோருடன் எவ்விதத் தொடர்பும் கொண்டிருக்க சட்டத்தால் மறுக்கப்பட்டதும் நாம் அறிந்ததே. ஆனால் ஒரு தொழுநோயாளர் மட்டும் விசுவாசத்தால் தூண்டப்பட்டு, எவ்வித அச்சமும் இன்றி கூட்டத்தினிடையே புகுந்து இயேசுவை அணுகி, தன்னைத் தூய்மைப்படுத்த கேட்பது குறித்து புனித லூக்கா நமக்கு எடுத்துரைக்கிறார். இந்த தொழுநோயாளர் தன் செய்கையின் வழியாக, சட்டத்தை மீறினார் என்றால், அந்நோயாளியைத் தொட்டு குணமளித்து தூய்மைப்படுத்தியதன் வழியாக இயேசுவும் சட்டத்தை மீறியுள்ளார். நம்மிடையே வாழும், ஏழைகளையும் உதவித்தேவைப்படும் மக்களையும் அணுகிச் சென்று அவர்களைத் தொட்டு உதவுவதில் நாம் அச்சம் கொள்ளுதல் கூடாது என்பதை இயேசுவின் இச்செயல் நமக்குக் கற்பிக்கிறது. குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால், தொழுநோயாளர் இயேசுவைச் சந்தித்த நிகழ்வு இத்தோடு முடிவடைந்து விடவில்லை. குணமடைந்த தொழுநோயாளரை நோக்கி இயேசு, “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம். நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று கட்டளையிடுகிறார். இவ்வாறு கூறுவதன் வழியாக, இயேசு, அவரின் குணமளிக்கும் புதுமைகள், பாவிகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதையும், உண்மையான விசுவாசத்திற்கு நிறைந்த பலன் உண்டு என்று காண்பிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளன என்பதை வெளிப்படுத்துகிறார். நாம் ஒவ்வொருவரும் நம்முடைய தேவைகளை உணர்ந்து, இறைவனின் குணமளிக்கும் தொடுதலை இறைஞ்ச வேண்டும் என இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். அந்த தொழுநோயாளரைப் போலவே, நாமும் இயேசுவை நோக்கி, விசுவாசத்தில் திரும்புவதோடு, நம் வாழ்வு வழியாக அவரின் இரக்கம், மன்னிப்பு மற்றும் ஆன்மீக மறுபிறப்பு எனும் கொடைகளைப் பறைசாற்றுவோம்.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.