2016-06-22 16:18:00

கொலைகாரர்களை நாம் மன்னிக்க வேண்டும், நைஜீரிய ஆயர்


ஜூன்,22,2016. நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதியில் கடந்த ஏப்ரலில் நடந்த வன்முறைத் தாக்குதலில், பலரைக் கொன்றவர்களை மன்னிக்க வேண்டும் என்று, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் ஒருவர் கூறினார்.

மிகுந்த வேதனைகளைக் கொணர்ந்த கடும் தாக்குதலை நடத்தியவர்களை மன்னிப்பது கடினமாக இருந்தாலும், மன்னிக்காத உணர்வு, அமைதியைக் கொண்டு வராது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டுமென்று, அவ்வன்முறைக்குப் பலியானவர்களில் ஒன்பது பேரின் அடக்கத் திருப்பலியில் கூறினார் ஆயர் Godfrey Igwebuike Onah.

தென்கிழக்கு நைஜீரியாவின் Enugu மாநிலத்தில், Uzo-Uwani பகுதியை, Fulani இனத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த ஏப்ரலில் ஆக்ரமித்து, தாக்கி, பல மக்களையும், வீட்டு விலங்குகளையும் கொன்றனர் மற்றும், கத்தோலிக்க ஆலயம் உட்பட பல சொத்துக்களையும் அழித்தனர்.

இத்தகைய கொடூர நிகழ்வை இப்பகுதி மீண்டும் சந்திக்கக் கூடாது என்றும் செபித்தார் ஆயர் Godfrey.  

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.