2016-06-22 16:24:00

ஒரே நாளில் 20 செயற்கைக் கோள்கள் அனுப்பி இஸ்ரோ சாதனை


ஜூன்,22,2016. இஸ்ரோ வரலாற்றில் முதல்முறையாக, 20 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி- சி34 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 20 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலில், கார்டோசாட், சத்யபாமா, புனே பல்கலைக்கழக செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. பின்னர் அதனைத் தொடர்ந்து 19 செயற்கைக்கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து 20 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி34 ராக்கெட் இப்புதன் காலை 9.26 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான 48 மணிநேர கவுன்ட்டவுன் இத்திங்கள் காலை 9.26 மணிக்கு தொடங்கியது.

இஸ்ரோ வரலாற்றில் முதன்முறையாக 20 செயற்கைக்கோள்கள் ஒரே முறையில் விண்ணில் ஏவப்பட்டதற்கு, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி போன்றோர் இஸ்ரோ அறிவியலாளர்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இஸ்ரோ தலைவர் கிரண் குமார் அறிவியலாளர்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளதோடு இது வரலாற்றுச் சாதனை. இஸ்ரோ மிக அற்புதமான செயலைச் செய்து முடித்துள்ளது என்றார்.

20 செயற்கைக் கோள்களில் சத்தியபாமா பல்கலைக்கழகம், புனே பொறியியல் கல்லூரி, இஸ்ரோவின் கார்ட்டோசாட்-2 ஆகிய 3 செயற்கைக் கோள்கள் இந்தியாவை சேர்ந்தவை. மற்ற 17 செயற்கைக் கோள்களும் அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவை. 20 செயற்கைக் கோள்களின் மொத்த எடை 1,288 கிலோ ஆகும்.

கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோள் பூமியைப் படமெடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும். இதன் எடை 727.5 கிலோ. பூமியில் இருந்து 505 கி.மீ. தொலைவில் இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும்.

சத்தியபாமாசாட்’ செயற்கைக் கோள், சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்ததாகும். இது 1.5 கிலோ எடை கொண்டது. பசுமை இல்ல வாயுக்கள் குறித்த தகவல்களை சேகரிக்க இது அனுப்பப்படுகிறது. புனே பொறியியல் கல்லூரி தயாரித்துள்ள ‘ஸ்வயம்’ செயற்கைக் கோள் 1 கிலோ எடை கொண்டது.

இதற்கு முன்னதாக, 2008-ம் ஆண்டு ஒரே ராக்கெட் மூலம் அதிகபட்சமாக 10 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்தது. தற்போது முதல்முறையாக ஒரே ராக்கெட் மூலம் 20 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.