2016-06-22 15:20:00

இது இரக்கத்தின் காலம் – சொல்லும் முறையில்தான் எதுவும் உள்ளது


ஓர் அரசருக்கு, அவருடைய எல்லாப் பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது. இதனால் காலையில் பீதியுடன் எழுந்த அவர், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தார். அந்த நாடி ஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கை வாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஓர் ஓலையை வாசித்துவிட்டு, ‘அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்’என்று பலன் சொன்னார். உடனே அந்த அரசர் மிகவும் கோபமுற்று, ‘இவனைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்!’ என்று உத்தரவிட்டார். அதன் பிறகும் மன்னரின் மனம் அமைதியடையவில்லை. இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன் பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன என்று வினவினார். அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார். அவரும் அதைப் பார்த்துவிட்டு, ‘மன்னா! உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம்விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள்’என்று பலன் கூறினார். இதனால் மனம் குளிர்ந்த அரசர், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தார். இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள், அதே விடயத்தைதான் சொன்னார்கள். ஆனால் ஒருவர் எல்லாரும் இறந்துவிடுவார்கள் என்றார், இன்னொருவர் எல்லாரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார், அவ்வளவுதான் வித்தியாசம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.