2016-06-21 15:54:00

மறைசாட்சிகள், இனப்படுகொலைக்குப் பலியானவர்கள் மட்டுமல்ல..


ஜூன்,21,2016. மறைசாட்சிகள், இனப்படுகொலைக்குப் பலியானவர்கள் மட்டுமல்ல, அவர்கள் விசுவாசத்திற்குச் சான்று பகர்ந்தவர்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

கடந்த வெள்ளியன்று, உரோம் நகரிலுள்ள இரு வயதுமுதிர்ந்த அருள்பணியாளர்கள் இல்லங்களைப் பார்வையிடச் சென்றபோது, ஒருமணி நேரத்திற்கு மேல் அவர்களுடன் செலவிட்டு, அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை இவ்வாறு கூறினார். 

மறைசாட்சியம் என்பது, கிறிஸ்தவச் சான்றுவாழ்வின் முழுமையான வெளிப்பாடாகும், இது மிக உன்னத வீரத்துவமான வாழ்வாகும் என்றுரைத்த திருத்தந்தை, 2015ம் ஆண்டில், லிபியக் கடற்கரையில், ஐ.எஸ். இஸ்லாமிய அரசால் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்ட 21 எகிப்திய கிறிஸ்தவர்களில் ஒருவர்கூட இறையியலாளர்கள் அல்ல, ஆனால் அவர்கள் கிறிஸ்தவ உறுதிப்பாட்டைக் கொண்ட மறைவல்லுநர்கள், அவர்கள் விசுவாசத்தின் சான்றுகள் என்றும் கூறினார்.

இளையோர் தங்கள் விசுவாசத்தை வாழ்வதற்கு எவ்வாறு துணிச்சலைப் பெற முடியும் என்ற கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவில் தாங்கள் வைத்திருக்கும் விசுவாசத்திற்குச் சான்று பகருமாறு நற்செய்தி அழைக்கின்றது என்றும் கூறினார்.

திருத்தந்தையின் இப்பதில்கள் பற்றிக் கூறிய, அருள்பணி லொம்பார்தி அவர்கள், இனப்படுகொலை பற்றி திருத்தந்தை பேசியபோது, அரசியல் நிலைப்பாட்டில் பேசாமல், விசுவாசத்தின் அடிப்படையில் பேசினார் என்றார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.