2016-06-21 16:15:00

பிஜேபி எம்.பி குற்றசாட்டுக்கு அன்னை தெரேசா சபையினர் கண்டனம்


ஜூன்,21,2016. நொபெல் விருது பெற்ற அன்னை தெரேசா, இந்தியாவை கிறிஸ்தவமயமாக்குவதற்கு இடம்பெற்ற சதித்திட்டத்தின் ஓர் அங்கமாக இருந்தார் என, பாரதீய ஜனதா எம்.பி யோகி ஆதித்யநாத் அவர்கள் கூறியிருப்பதற்கு, அன்னை தெரேசா அவர்கள் ஆரம்பித்த பிறரன்பு மறைப்பணியாளர் சபையின் நிர்வாகிகள் தங்களின் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். 

உத்திரப்பிரதேச மாநிலம், கோரக் பூரில் நடைபெற்ற Ram Katha நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய யோகி ஆதித்யநாத் அவர்கள், இந்தியாவைக் கிறிஸ்தவமயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அன்னை தெரேசா இருந்தார். இதனால் அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா உள்பட வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாதம் வளர்ந்தது, வடகிழக்கின் நிலையை நீங்கள் அனைவரும் அறியாதிருக்கிறீர்கள் எனக் கூறினார்.   

பாரதீய ஜனதா எம்.பி-யின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அன்னை தெரேசா நிறுவிய சபையினர், தங்களது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

சமூகப்பணி மற்றும் உலக அமைதிக்காக நொபெல் விருது பெற்ற அன்னை தெரேசாவை, பாஜகவினர் திட்டமிட்டு இழிவுபடுத்தவதாக அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அன்னை தெரேசா அவர்கள், சமூகப் பணிகள் ஆற்றியதன் வழியாக மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சித்தார் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கடந்த ஆண்டு கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, அருளாளர் அன்னை தெரேசா அவர்கள், வருகிற செப்டம்பர் 4ம் தேதி வத்திக்கானில் புனிதராக அறிவிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Agencies/தினத்தந்தி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.