2016-06-21 15:23:00

திருத்தந்தையின் அர்மேனியப் பயணத்தின் முக்கியத்துவம்


ஜூன்,21,2016. “மக்கள், தங்களின் சுய முன்னேற்றத்தின் முதன்மையான கைவினைஞர்கள், இதற்கு இவர்கள் முதலில் பொறுப்பானவர்கள்”என்ற வார்த்தைகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இச்செவ்வாயன்று வெளியாயின.

மேலும், வருகிற வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் அர்மேனிய நாட்டுக்கான திருத்தூதுப் பயணம் பற்றி இச்செவ்வாயன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் விளக்கினார் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி.

இப்பயணம், திருத்தந்தையின் 14வது வெளிநாட்டுப் பயணம் என்றும், அவர் செல்லும் 22வது நாடு என்றும், இதில் ஜார்ஜியா, அஜர்பைஜான் நாடுகளுக்கும் திருத்தந்தை செல்வதாக இருந்தது, ஆனால் சில காரணங்களுக்காக, இவ்விரு நாடுகளுக்கு வருகிற செப்டம்பரில் திருத்தந்தை செல்கிறார் என்றும் அறிவித்தார் அருள்பணி லொம்பார்தி.

இன்னும், அர்மேனியாவுக்கான திருத்தூதுப் பயணத்தைப் புரிந்துகொள்வதற்கு, இரு முக்கிய கூறுகள் நினைவில் வைக்கப்பட வேண்டுமென, அந்நாட்டு அருள்பணியாளர் ஒருவர் கூறினார்.

நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தை அதிகாரப்பூர்வ மதமாக அங்கீகரித்த முதல் நாடு அர்மேனியா என்றும், இது, 1915ம் ஆண்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் கம்யூனிசம் ஆகிய இரு காயங்களையும் அனுபவித்த நாடு என்றும் கூறினார் அருள்பணியாளர் Krikor Badichah.

திருத்தந்தையின் அர்மேனியத் திருத்தூதுப் பயணம் பற்றி ரோம் ரிப்போர்ட்ஸ் ஊடகத்திடம் பேசியபோது இவ்வாறு கூறினார், லெபனானில் மறைப்பணியாற்றும் அர்மேனிய அருள்பணி Badichah.

வருகிற வெள்ளி முதல் ஞாயிறு வரை(ஜூன் 24-26) திருத்தந்தை மேற்கொள்ளும் இத்திருத்தூதுப் பயணத்தில், திருத்தந்தை, அர்மேனியர்களுக்கு மிகவும் முக்கியமான இடமாகிய Khor Virapக்குச் செல்வார் என்றும், இங்கு ஒரு கிணற்றில் அர்மேனியர்களின் பாதுகாவலரான புனித கிரகரி, 13 ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தார் என்றும் கூறினார் அருள்பணி Badichah.

புனித கிரகரி, இந்தக் கிணற்றிலிருந்து புதுமையாகக் காப்பாற்றப்பட்டு, கி.பி.301ம் ஆண்டில் அரசர் 3ம் Tiridates மற்றும் அரச குடும்பத்தினருக்குத் திருமுழுக்கு அளித்தார் என்றும், இவ்வாறு அர்மேனியா, கிறிஸ்தவ நாடாக மாறியது என்றும் விளக்கினார் அருள்பணி Badichah.

இந்நாட்டில், சிறுபான்மை கத்தோலிக்கத் திருஅவை, பெரும்பான்மை அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவை என, இரு முக்கிய கிறிஸ்தவ சபைகள் உள்ளன, எனினும், திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம் முழுவதும், அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவைத் தலைவர் முதுபெரும் தந்தை 2ம் Karekin அவர்கள் திருத்தந்தையுடன் செல்வார் என்றும் பகிர்ந்துகொண்டார் அருள்பணி Badichah.

அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவை, 451ம் ஆண்டில் நடந்த கால்சிதோன் பொதுச் சங்கத்தை ஏற்க மறுத்த கிறிஸ்தவர்களால் உருவானதாகும்.

ஏறத்தாழ 600 ஊடகப் பிரதிநிதிகள், திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தில் கலந்துகொள்ள விண்ணப்பித்திருப்பதாக, அர்மேனிய வெளியுறவு அமைச்சகம் கூறியது.

ஆதாரம் : Rome Reports/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.