2016-06-21 16:27:00

உலக யோகா தினம் : அன்பை உள்ளிழுத்து வெறுப்பை வெளிவிடுங்கள்


ஜூன்,21,2016. இனம், மதம், வயது, பாலினம் என்ற வேறுபாடின்றி, உடன்வாழும் மனிதருடன் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு, உலகினர் அனைவரும் தங்களை அர்ப்பணிக்குமாறு உலக யோகா தினத்தன்று அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.

ஜூன் 21, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட உலக யோகா தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ள பான் கி மூன் அவர்கள், பொதுவான, விலைமதிப்பில்லா ஒரே வீட்டைப் பகிர்ந்துகொள்ளும் ஒரே மனிதக் குடும்பத்தின் உறுப்பினர்களாகிய நாம், ஒவ்வொரு நாளும் இத்தினத்தைக் கொண்டாடுவோம் என்று கூறியுள்ளார்.

நலமான வாழ்வு முறைகளைத் தேர்ந்துகொண்டு வாழவும் வலியுறுத்தியுள்ள அவர், இந்தியாவில் தோன்றிய யோகா, உடல், உள்ள மற்றும் ஆன்மீகத்திற்கு உதவும் பழங்கால பயிற்சி முறை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொண்ட வளர்ச்சித்திட்ட இலக்குகளை எட்டுவதில், நலமான வாழ்வுமுறையின் முக்கியத்துவத்தை இந்த உலக யோகா தினம் கோடிட்டுக் காட்டுகிறது என்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.

2014ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி, ஐ.நா. பொது அவை, உலக யோகா தினத்தை அங்கீகரித்து, அந்நாளை ஜூன் 21 என்றும் அறிவித்தது. இதன்படி, முதல் உலக யோகா தினம், 2015ம் ஆண்டு உலகெங்கும் கொண்டாடப்பட்டது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.