2016-06-21 10:39:00

இது இரக்கத்தின் காலம் : 'இயற்கைக்குச் செலுத்தவேண்டிய கடன்'


செல்வம் மிகுந்த, வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு, வறுமைப்பட்ட அல்லது, வளரும் நாடுகள் செலுத்தவேண்டிய கடனைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இறைவா, உமக்கே புகழ்' என்ற திருமடலில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இயற்கைக்கு நாம் அளிக்கவேண்டிய கடனைக் குறித்தும் இம்மடலில் அவர் எழுதியுள்ளார். இத்திருமடலின் 52ம் பகுதியில், திருத்தந்தை கூறியுள்ள கருத்துக்கள் இதோ:

"பிற நாடுகளுக்கு செலுத்தவேண்டிய கடன் தொகை, வறுமைப்பட்ட நாடுகள் மேற்கொள்ளக்கூடிய வளர்ச்சிப்பணிகளைக் கட்டுப்படுத்தும் கருவியாக மாறிவிட்டது. இயற்கைக்கு செலுத்தவேண்டியக் கடன், வேறுவிதமாக அமைந்துள்ளது...

இயற்கை வளங்கள் பலவற்றின் பிறப்பிடங்களாக விளங்கும் வளரும் நாடுகள், இவற்றைப் பயன்படுத்தி தங்கள் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்க முடியாத நிலையில் உள்ளன. தங்கள் வளர்ச்சியைத் தியாகம் செய்து, செல்வம் மிகுந்த நாடுகளின் முன்னேற்றத்திற்காக, வளரும் நாடுகள், தங்கள் இயற்கை வளங்களைச் சீரழிக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன...... இயற்கைக்குச் செலுத்தவேண்டிய இக்கடனை அடைப்பதற்கு, வளர்ச்சிபெற்ற நாடுகள் உதவி செய்யவேண்டும். அளவுக்கதிகமாக, இயற்கைச் செல்வங்களை விழுங்கிவரும் போக்கினை, வளர்ச்சிபெற்ற நாடுகள் கட்டுப்படுத்தினால், வறுமைப்பட்ட நாடுகள் வாழ்வதற்கு ஏதுவானச் சூழல் உருவாகும்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் திருமடலில் கூறியுள்ளார்.

கடன்களை மன்னிப்பது, யூபிலி ஆண்டின் ஒரு முக்கிய அம்சம். வறுமைப்பட்ட நாடுகள், செல்வம் மிகுந்த நாடுகளுக்கு செலுத்தவேண்டிய கடன், இந்த யூபிலி ஆண்டில் மன்னிக்கப்பட வேண்டும் என்று மன்றாடுவோம். மேலும், 'இயற்கைக்கு செலுத்தவேண்டியக் கடன்' என்று திருத்தந்தை சுட்டிக்காட்டும் கடனைத் தீர்ப்பதற்கு, அனைத்து நாடுகளும், குறிப்பாக, செல்வம் மிகுந்த நாடுகள், தங்கள் முயற்சிகளைத் தீவிரமாக்க வேண்டும் என்றும் மன்றாடுவோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.