2016-06-20 15:42:00

பிறரைத் தீர்ப்பிடுவதற்கு முன் கண்ணாடியைப் பாருங்கள்


ஜூன்,20,2016. பிறரைத் தீர்ப்பிடுவதற்கு முன், நாம் எவ்வாறு காணப்படுகிறோம் என, கண்ணாடியில் முதலில் பார்க்க வேண்டுமென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இத்திங்கள் காலையில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார். 

இத்திங்கள் திருப்பலியின் நற்செய்தி வாசகத்தை(மத்.7,1-5) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, நம் தீர்ப்பிலிருந்து கடவுளின் தீர்ப்பை மாறுபடுத்திக் காட்டுவது, கடவுளின் எல்லையில்லா வல்லமை அல்ல, மாறாக அவரின் இரக்கமே என்று கூறினார்.

நாம் தீர்ப்பிடப்பட விரும்பவில்லையெனில், நாம் பிறரைத் தீர்ப்பிடக் கூடாது என்றுரைத்த திருத்தந்தை, இறுதி தீர்ப்பு நாளில், நம் ஆண்டவர் நம்மைக் கனிவோடு நோக்க வேண்டுமெனவே அனைவரும் விரும்புகிறோம் என்றும், ஆண்டவரும், நம் வாழ்வில் நாம் செய்த பல மோசமான செயல்களை மறந்து விடுவார் என்றும் கூறினார். 

நாம் தீர்ப்பிடுபவர்களாக இருக்கும்போது வெளிவேடக்காரர்கள் என இயேசு நம்மை அழைக்கிறார், எனவே, நாம் தொடர்ந்து மற்றவரைத் தீர்ப்பிட்டுக்கொண்டே இருந்தால், அதே அளவையுடனே நாமும் தீர்ப்பிடப்படுவோம், எனவே நாம் நம்மைக் கண்ணாடியில் பார்க்குமாறு ஆண்டவர் நம்மிடம் கேட்கிறார் என்றார் திருத்தந்தை.

மற்றவரைத் தீர்ப்பிடுவதற்குப் பதிலாக அவர்களுக்காகச் செபிக்க வேண்டுமென்றும், நாம் கடவுளின் இடத்தில் நம்மை வைக்கும்போது, அவர் சற்று சினமுற்று, நம்மை வெளிவேடக்காரர்கள் என அழைப்பார், தீர்ப்பிடுபவர்களாக இருப்பது மிகவும் அசிங்கமானது, தீர்ப்பு, கடவுளுக்கு மட்டுமே உரியது என்றும் விளக்கினார் திருத்தந்தை.

நம் தீர்ப்பு ஒருபோதும் உண்மையான தீர்ப்பாக இருக்காது, ஆண்டவரின் தீர்ப்புப் போல நம் தீர்ப்பு இருக்க முடியாது, ஏனென்றால், நாம் எல்லா வல்லமையும் படைத்தவர்கள் அல்ல என்றுரைத்த திருத்தந்தை, நம் தீர்ப்பில் இரக்கம் குறைவுபடுகின்றது என்றும், தீர்ப்பு பற்றி நாம் உணர ஆண்டவர் உதவுவாராக என்றும் கூறினார்.  

இத்தாலியில் கோடைகாலம் தொடங்கியிருக்கும்வேளை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இத்திங்கள் காலையில், திருத்தந்தையின் திருப்பலி இறுதியாக நடந்தது. அடுத்த இத்திருப்பலி, வருகிற செப்டம்பர் 8ம் தேதி வியாழனன்று தொடங்கும்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.