2016-06-20 14:05:00

இது இரக்கத்தின் காலம் : பகைவரிடம் அன்பு செலுத்துங்கள்


1832ம் ஆண்டில் பாரிசில் காலரா நோய் பரவியிருந்தது. அச்சமயத்தில், பிறரன்பு சபையின் அருள்சகோதரி மரி அவர்கள், மருத்துவமனைக்குச் சென்று உதவி வந்தார். ஒருநாள், அம்மருத்துவமனை பணியாள் ஒருவர், அச்சகோதரியை கெட்ட சொற்களால் மிகக் கேவலமாகச் சப்தமாகத் திட்டிக் கொண்டே இருந்தார். அச்சகோதரியும் எதுவும் நடக்காததுபோல், பணியை முடித்துவிட்டு போய்விட்டார். சிலநாள்கள் சென்று, அம்மருத்துவமனைக்குப் புதிய நோயாளர் ஒருவர் கொண்டு வரப்பட்டார். ஏற்கனவே அம்மருத்துவமனை நூற்றுக்கணக்கான காலரா நோயாளர்களால் நிறைந்திருந்தது. ஒவ்வொரு சில நொடிகளுக்கும் ஒருவர் இறந்து கொண்டிருந்தார். இதனால் புதிதாகக் கொண்டு வரப்பட்ட நோயாளருக்கு இடமில்லை. எனவே அவரைத் திருப்பி அனுப்பவிருந்தநேரத்தில், தற்செயலாக அவ்விடம் வந்த அருள்சகோதரி மரி அந்த நோயாளரை அடையாளம் கண்டு கொண்டார். தயவுசெய்து அவரைத் திருப்பி அனுப்பாதீர்கள், ஏதாவது ஒரு மூலையில் ஓர் இடம் கண்டுபிடித்து, அவரை நான் கவனித்துக் கொள்கிறேன் என்றார். அந்த நோயாளரும் அனுமதிக்கப்பட்டார்.  அச்சகோதரி, தான் பராமரித்துவந்த மற்ற நோயாளருடன் இவரையும் மிகுந்த அன்புடன் பராமரித்தார். எட்டு நாள்கள் சென்று, ஆபத்தான நிலையைக் கடந்தார் அந்த நோயாளி. அப்போது அவர் தன் அருகில் புதிய செவிலியர் ஒருவர் இருப்பதைப் பார்த்தார். அவரிடம், அந்த நோயாளி, அருள்சகோதரி மரி எங்கே என்றார். அருள்சகோதரி மரி காலராவால் தாக்கப்பட்டு, இந்த இரவில்தான் இறந்தார் என்றார் செவிலி. இது இரக்கத்தின் காலம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.