2016-06-18 14:09:00

யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் அப்துல் கலாம் சிலை திறப்பு


ஜூன்,18,2016. இந்தியாவில் மக்களின் குடியரசுத் தலைவராகத் திகழ்ந்த மறைந்த ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் உருவச் சிலை, இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இவ்வெள்ளியன்று திறந்து வைக்கப்பட்டது.

கடந்த 2012ம் ஆண்டு சனவரியில் யாழ்ப்பாணத்துக்கு அப்துல் கலாம் அவர்கள் வருகை தந்தார். அப்பயணத்தின்போது யாழ். பல்கலைக்கழகம் மற்றும் யாழ். பொதுநூலகங்களில் கலாம் உரையாற்றினார். பின்னர் அவர், 2015ம் ஆண்டு அரசு முறைப் பயணமாக இலங்கைக்குச் சென்றார். இதுதான் அவர் மேற்கொண்ட கடைசி வெளிநாட்டுப் பயணமாகும். அதன் பின்னர் ஜூலை 27ம் தேதியன்று அப்துல் கலாம் அவர்கள் காலமானார்.

இந்நிலையில் இந்தியா-இலங்கை இடையே நட்புறவை வளர்க்கும் விதமாக, யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் அப்துல் கலாம் அவர்களின் மார்பளவுச் சிலை, இந்தியத் தூதரகம் சார்பில் இவ்வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

இலங்கைக்கான இந்திய தூதர் சின்ஹா, வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து இந்தச் சிலையைத் திறந்து வைத்தனர். இந்தியாவுக்கு வெளியே அப்துல் கலாம் அவர்களுக்கு, தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்தில்தான் முதன் முறையாக சிலை திறக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து வீடியோ கருத்தரங்கு மூலம் இச்சனிக்கிழமையன்று திறந்து வைத்தார். இந்த விளையாட்டரங்கை இந்தியாதான் சீரமைத்துக் கொடுத்தது. அனைத்துலக யோகா தினமான ஜனவரி 21ம்ந் தேதியை முன்னிட்டு இந்த விளையாட்டரங்கம் திறக்கப்படுகிறது.

ஆதாரம் : oneindia / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.