2016-06-18 13:27:00

மனமாற்றம், தேவையில் இருப்போர்க்கு உதவச் செய்கின்றது


ஜூன்,18,2016. அன்பு இதயங்களே, இந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு மாதமும் வழங்கி வரும் சனிக்கிழமை சிறப்பு யூபிலி பொது மறைக்கல்வியுரை இச்சனிக்கிழமையன்றும் நடைபெற்றது. திருப்பயணிகள் கூட்டம் காலை ஆறு மணிக்கே வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திற்கு வெளியே காத்திருந்தது. இரக்கமும் மனமாற்றமும்(cfr.லூக்.24:45-48) என்ற தலைப்பில், காலை பத்து மணிக்கு மறைக்கல்வியுரையை ஆரம்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்புச் சகோதர, சகோதரிகளே, காலை வணக்கம். இயேசு, தம் உயிர்ப்புக்குப் பின்னர், தம் தந்தையிடம் செல்வதற்கு முன்னர், பலமுறைகள் தம் சீடர்களுக்குத் தோன்றினார் என, இத்தாலியத்தில் தனது உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உயிர்த்த இயேசு, எம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தல் பற்றிய நற்செய்திப் பகுதியை நாம் வாசிக்கக் கேட்டோம். உயிர்த்த இயேசு, எம்மாவு சீடர்களுக்குத் தோன்றியபோது, பாவ மன்னிப்புப் பெற, மனம் மாறுங்கள் என, அனைத்து நாடுகளுக்கும் தம் பெயரால் பறைசாற்றப்பட வேண்டுமெனப் பணித்தார்(லூக்.24:47). பாவங்களுக்காக மனம் வருந்துதல், மன்னிப்பு ஆகிய இரண்டுமே கடவுளின் இரக்கமுள்ள அன்பின் நற்செய்தியின் மையமாக அமைந்துள்ளன. நம் ஆண்டவரின் அன்பின் உடன்படிக்கைக்கு விசுவாசமாக இருக்கும்பொருட்டு, அவரிடம் திரும்பி வாருங்கள் என, பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்கள், மக்களை திரும்பத் திரும்ப அழைத்தனர். மனம் வருந்துதல், மனமாற்றம் மற்றும் நற்செய்தியை நம்புங்கள் என்று போதித்தே, இயேசு, தம் பொதுத் திருப்பணியைத் தொடங்கினார்(cf. மாற்.1:15). இயேசுவின் மனமாற்றத்திற்கான அழைப்பு, தீர்ப்பிடுவதாக இல்லை, ஆனால், பாவிகளுக்கு மிக நெருக்கமாக இருப்பதிலும், தேவையில் இருப்போர்மீது இரக்கம் காட்டுவதிலும் வெளிப்படுத்தப்பட்டது. மத்தேயு மற்றும் சக்கேயுவின் மனமாற்ற நிகழ்வுகளில், இயேசு, பாவிகள், கடவுளின் அன்பிரக்கத்தை உணரவும், மன்னிப்பு என்ற தம் கொடைக்கு அவர்கள் தங்கள் இதயங்களைத் திறக்கவும் செய்தார். உண்மையான மனமாற்றம் என்பது, விலைமதிப்பில்லாத ஆண்டவரின் அன்பை அனுபவிக்கும் விதமாக, பிறருக்கு, குறிப்பாக, ஏழைகளுக்கு தங்களைத் திறப்பதற்கு எப்போதும் வழிசெய்கிறது. நாம் மன்னிப்பு பெற வேண்டும், மனமாற்றம் அடைய வேண்டும், நம் வாழ்வை மாற்றிப் புதுப்பிப்பதற்கு ஆண்டவரின் அருளின் வல்லமைக்கு நம் இதயங்களை முழுவதுமாகத் திறக்க வேண்டும் என்பதன் அவசியத்தை இந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் உணர்வோமாக.

இவ்வாறு, இச்சனிக்கிழமை யூபிலி பொது மறைக்கல்வியுரையை நிறைவு செய்த  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிங்கப்பூர், இந்தோனேசியா, ஹாங்காங் உட்பட பல நாடுகளிலிருந்து இதில் கலந்துகொண்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களில் இயேசு ஆண்டவரின் மகிழ்வும், அமைதியும் பொழியப்படச் செபித்து, தனது அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.