2016-06-18 14:04:00

இந்துக் கைதிகள், முஸ்லிம் கைதிகளுடன் சேர்ந்து இரமதான் நோன்பு


ஜூன்,18,2016.  வகுப்புவாத வன்முறை எளிதாக இடம் பெறும் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் இரு சிறைகளில், இந்துக் கைதிகள், முஸ்லிம் கைதிகளுடன் சேர்ந்து இரமதான் புனித மாத நோன்பு இருக்கின்றனர் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

முசாஃப்பர்நகர் (Muzaffarnagar) சிறையிலுள்ள ஏறக்குறைய 100 இந்து மத ஆண் கைதிகள், அங்குள்ள 1,100 முஸ்லிம் கைதிகளுடன் சேர்ந்து, விடியற்காலை முதல் கதிரவன் மறையும்வரை இரமதான் புனித மாதத்தில் நோன்பு இருக்கின்றனர். இந்நகரில், 2013ம் ஆண்டில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் அறுபது பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த பல ஆண்டுகளில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே 12க்கும் மேற்பட்ட வன்முறைகள் வெடித்த கான்பூர் சிறையில், ஏறத்தாழ 25 இந்து மத ஆண் கைதிகள், அங்குள்ள 350 முஸ்லிம் கைதிகளுடன் சேர்ந்து, இரமதான் நோன்பு இருக்கின்றனர். ஏறத்தாழ பத்து இந்துமதப் பெண் கைதிகளும் முஸ்லிம்களுடன் சேர்ந்து, இரமதான் நோன்பு இருக்கின்றனர்.

இது குறித்துப் பேசிய முசாஃப்பர்நகர் சிறை கண்காணிப்பாளர் சதீஷ் திரிப்பதி அவர்கள், இந்து மதக் கைதிகளின் இரமதான் நோன்பு நடவடிக்கை, உறுதியான உடன்பிறப்பு உணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று கூறினார்.

முசாஃப்பர்நகரில், முஸ்லிம்கள், ஆக்ரமிப்பாளர்கள் என்றும், இவர்கள் தங்களின் மூதாதையரைத் தாக்கி, செல்வத்தை அபகரித்து, கோவில்களை அழித்துக் குடியேறியவர்கள் என்றும் இந்துக்கள் கருதுகின்றனர் என, சதீஷ் திரிப்பதி அவர்கள் மேலும் கூறினார்.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.