2016-06-17 16:27:00

திருப்பீட பொதுநிலையினர் அவையினரின் பணிகளுக்கு நன்றி


ஜூன்,17,2016. திருப்பீட பொதுநிலையினர் அவை நடத்தும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் 85 பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அவை ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக ஆற்றிவரும் பணிகளுக்கும், இதில் ஆர்வமுடன் உழைத்த எல்லாருக்கும் நன்றி தெரிவித்தார்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் விருப்பத்தின்பேரில் தொடங்கப்பட்ட இந்த அவைக்கு, கடந்த ஆண்டுகளில் ஆண்டவர் செய்துள்ள நன்மைகள் மற்றும் இந்த அவை சந்தித்த பல சவால்கள் பற்றிப் பேசிய திருத்தந்தை, உலக இளையோர் தினம் தொடங்கப்பட்டது, பல புதிய பொதுநிலையினர் கழகங்கள், பல இயக்கங்கள் தோன்றியது போன்றவற்றைக் குறிப்பிட்டார்.

இந்த அவை, குடும்பம் மற்றும் வாழ்வு அவையோடு இணையவிருப்பதையும் குறிப்பிட்டு, இந்தப் புதிய முயற்சியை வரவேற்குமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

கிறிஸ்துவின் இரக்கமுள்ள அன்பால் தொடப்பட்ட உண்மையான மற்றும் தூய்மையான விசுவாசத்தால் வழிநடத்தப்படும் வாழ்வைக் கொண்டிருக்கும், நன்றாக பயிற்சி பெற்ற பொதுநிலையினர் திருஅவைக்குத் தேவைப்படுகின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்தப் பொதுநிலையினர் அவை மீது ஆர்வம் கொண்டு, உலக இளையோர் தினத்தை உருவாக்கிய புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களுக்கு சிறப்பாக நன்றி தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.