2016-06-17 16:34:00

திருத்தந்தை - திருமணத்தில் நிரந்தர அர்ப்பணம் அவசியம்


ஜூன்,17,2016. தம்பதியர், திருமணத்தின் நிரந்தர அமைப்புமுறை மற்றும் அர்ப்பணத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் திருமணத்தில் நுழைவதால், இக்காலத்தில் நடைபெறும் பல திருமண அருளடையாளங்கள் செல்லுபடியானவை அல்ல என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்காலத்தில் திருமணத்தில் ஏற்படும் பிரச்சனை பற்றியும், திருமணம் என்ற அருளடையாளத்தைப் புரிந்துகொள்வதற்கும், அன்பில் அவர்களை வளர்ப்பதற்கும் இளையோர்க்கு, கத்தோலிக்கர் எவ்வாறு உதவ முடியும் என்ற கேட்ட கேள்விக்குப் பதில் அளித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

உரோம் மறைமாவட்ட ஆயர் என்ற முறையில், அம்மறைமாவட்ட மேய்ப்புப்பணி மாநாட்டை, இவ்வியாழன் மாலையில், புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் ஆரம்பித்து வைத்த திருத்தந்தை, இதில் கலந்துகொண்டவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

அந்தந்த நேரத்துக்கடுத்த ஒரு கலாச்சாரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றுரைத்த திருத்தந்தை, தனது சொந்த அனுபவத்திலிருந்து இக்கேள்விக்குப் பதில் அளித்தார்.

பல ஆண்டுகள் குருத்துவ வாழ்வுக்குப் படித்து அருள்பணியாளராகும் குருக்கள், அவ்வாழ்வைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றனர், ஆனால் பொதுநிலையினர், தங்கள் வாழ்வு முழுவதும் திருமணம் எனும் அருளடையாளத்தில் வாழவேண்டுமென்பது ஏன் என்று ஒரு பெண் புவனோஸ் ஐரெசில் தன்னிடம் கேட்டதாகத் தெரிவித்தார் திருத்தந்தை.

திருமணத் தயாரிப்பு ஒரு பிரச்சனை என்றும், திருமணப் பிரச்சனைகள், சுற்றியுள்ள சமூகச்சூழல்களோடு தொடர்புடையவை என்றும், இது ஒரு சமூக விவகாரம், இதை நாம் எப்படி மாற்றப் போகிறோம், எனக்குத் தெரியவில்லை என்றும் கூறினார் திருத்தந்தை.

மேய்ப்புப்பணியில் மிகவும் கடினமான ஒரு துறை திருமணம் என்றும் கூறிய   திருத்தந்தை, இம்மாநாட்டில் விவாதிக்கப்படவிருக்கும், வளர்இளம் பருவத்தினரிடையே அன்பு, திருமணத் தயாரிப்பு, தம்பதியரின் அன்பு, பிரமாணிக்கம், வாழ்வை வழங்குவதில் மகிழ்வு, குடும்பமும், சகோதரத்துவமும் போன்ற பிற தலைப்புக்களிலும் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

இம்மாநாட்டில் 350க்கும் மேற்பட்ட பங்குக் குருக்கள் மற்றும் ஏராளமான பொதுநிலையினர் கலந்துகொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.