2016-06-17 16:16:00

உலகில் ஒவ்வோர் இடத்திலும் நிரந்தர இரக்கப் பணிகளுக்கு அழைப்பு


ஜூன்,17,2016. உலகின் ஒவ்வொரு நகரம், ஒவ்வொரு மறைமாவட்டம் மற்றும் ஒவ்வொரு கழகத்திலும் இரக்கத்தின் பணிகளை ஆற்றுமாறு, உலகில் நன்மனம் கொண்ட எல்லாருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

உலகில் துன்புறும் திருஅவைகளுக்கு உதவும் Aid to the Church in Need பாப்பிறை நிறுவனம் இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ள புதிய முயற்சியை வரவேற்று, அதை ஊக்கப்படுத்தியுள்ள திருத்தந்தை, உலகில் அனைத்து இடங்களிலும் ஆற்றப்படும் இரக்கப் பணிகள், நிரந்தரமான மற்றும் தெளிவான இரக்கப் பணிகளாக ஆற்றப்பட வேண்டுமென்று கேட்டுள்ளார்.

Aid to the Church in Need நிறுவனம், உலகில் துன்புறும் திருஅவைகளுக்காக நிதி திரட்டும் நடவடிக்கையை, ஜூன் 17, இவ்வெள்ளி முதல் வருகிற அக்டோபர் 4 வரை நடத்துகின்றது. இந்நிகழ்வு குறித்து, இறைவனின் இரக்கமாக இருங்கள் என்ற தலைப்பில், இவ்வெள்ளியன்று செய்தியாளர் கூட்டத்தில் விளக்கப்பட்டது. இந்நிகழ்வில் காணொளிச் செய்தி வழியாகப் பேசிய திருத்தந்தை, இரக்கம் பற்றி அஞ்சாதீர்கள், இரக்கம் இறைவனின் கனிவான அக்கறையாகும் என்று கூறினார்.

இந்நிகழ்வில், பாகிஸ்தானின் லாகூர் பேராயர் செபஸ்தியான் பிரான்சிஸ் ஷா, ஈராக்கின் குர்திஸ்தான் அருள்பணி Imad Gargees உட்பட சில முக்கிய பிரமுகர்கள் உரையாற்றினர்.  

நம் அனைவருக்கும் இறைவனின் இரக்கம் தேவைப்படுகின்றது, அதேநேரம், மற்றவரின் இரக்கமும் நம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகின்றது, நாம் பிறரின் கரங்களை எடுத்து, அன்போடு தடவிக்கொடுத்து, ஒருவர் ஒருவர் மீது அக்கறை காட்ட வேண்டும் என்று கூறிய திருத்தந்தை, நாம் பல போர்களை நடத்தக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

Aid to the Church in Need நிறுவனத்தின் நடவடிக்கைக்கு முதல் நன்கொடையாளராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எர்பில் புனித ஜோசப் மருத்துவமனைக்கு உதவியுள்ளார். இம்மருத்துவமனை, பல மதங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 2,800 புலம்பெயர்ந்த மக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.