2016-06-16 17:10:00

பாலைவனமாதல் மற்றும் வறட்சியைத் தடுப்பதற்கான உலக நாள்


ஜூன்,16,2016. தரிசு நிலங்களை மீண்டும் சாகுபடிக்கு ஏற்ற வளமையான நிலங்களாக மாற்றுவதற்கு அனைவரின் ஒத்துழைப்பு அவசியம் என்று, பாலைவனமாதல் மற்றும் வறட்சியைத் தடுப்பதற்கான உலக நாளுக்கென வெளியிட்டுள்ள செய்தியில், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார்.

நிலங்கள் பாலைவனமாதல், நில அரிப்பு, வறட்சி, காலநிலை மாற்றம் ஆகிய அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும், இதனால், வெள்ளமும், கடும் வெப்பமும், வறட்சியும், தரிசு நிலங்களும் அதிகரித்துள்ளன என்றும் பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார்.

ஐம்பது விழுக்காட்டுக்கு மேற்பட்ட வேளாண்மை நிலங்கள், கடுமையாய்ப் பாதிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும், ஒரு கோடியே இருபது இலட்சம் ஹெக்டேர் நிலங்கள் உற்பத்தித் திறனை இழக்கின்றன என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது.

இந்நிலையால் ஏறத்தாழ எண்பது கோடிப் பேர், நேரிடையாகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்றும், அடுத்த 25 ஆண்டுகளில், உலகளாவிய உணவு உற்பத்தி 12 விழுக்காடு குறைந்து, உணவுப்பொருள்களின் விலை முப்பது விழுக்காடு அதிகரிக்கக் கூடும் என்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.

ஐ.நா.வின் புதிய வளர்ச்சித்திட்ட இலக்கை எட்டுவதற்கு, ஒவ்வோர் ஆண்டும் ஒரு கோடியே இருபது இலட்சம் ஹெக்டேர் நிலங்களை மீண்டும் வளப்படுத்த வேண்டியுள்ளதெனக் கூறியுள்ள பான் கி மூன் அவர்கள், தரிசு நிலங்களை மீண்டும் வேளாண்மைக்குப் பயன்படுத்துவதால், 2050ம் ஆண்டுக்குள், உணவு உற்பத்தி அமைப்புக்குள் ஏறக்குறைய இருபது கோடி வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியும்  என்றும் கூறியுள்ளார்.

ஜூன் 17, இவ்வெள்ளியன்று, பாலைவனமாதல் மற்றும் வறட்சியைத் தடுப்பதற்கான உலக நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.