2016-06-16 16:59:00

கச்சின் மாநிலத்தில் அமைதியும் ஒப்புரவும் ஏற்பட வேண்டுகோள்


ஜூன்,16,2016. மியன்மாரின் கச்சின் மாநிலத்தில் அமைதியும் ஒப்புரவும் உடனடியாக ஏற்படுவதற்கு உதவுமாறு, நன்மனம் கொண்ட அனைத்து மக்களுக்கும் வேண்டுகோள் விடுப்பதாக, அந்நாட்டு கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

மியன்மார் கத்தோலிக்கத் திருஅவையின் சார்பாக இவ்வேண்டுகோளை விடுப்பதாகத் தெரிவித்துள்ள, யாங்கூன் பேராயர் கர்தினால் போ அவர்கள், அந்நாட்டின் வட பகுதியில், இராணுவத்திற்கும், கச்சின் சிறுபான்மை இனத்தவருக்கும் இடையே இடம்பெறும் உள்நாட்டுச் சண்டை குழப்பமான சூழலை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மியன்மார் அரசு, அப்பகுதியில் 17 ஆண்டுகள் அமலிலிருந்த போர் நிறுத்தத்தை, 2011ம் ஆண்டு ஜூனில் முடிவுக்குக் கொண்டு வந்தது. இது, கச்சின் மக்களுக்கு எதிராக, பெரிய அளவில் இராணுவத் தாக்குதலுக்குக் காரணமானது. இதனால் மக்கள் பெருமளவில் புலம்பெயர்ந்தனர். மனிதாபிமான நெருக்கடியும் ஏற்பட்டது.

இந்நிலையில், தற்போதைய புதிய அரசு, அனைத்து அரசியல், இராணுவ, பொதுமக்கள் மற்றும் சமயக் குழுக்களுக்கு இவ்விண்ணப்பத்தை முன்வைப்பதாகத் தெரிவித்தார் கர்தினால் போ.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.