2016-06-15 16:50:00

கவுரவக் கொலைகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு வரவேற்பு


ஜூன்,15,2016. பாகிஸ்தானில் இடம்பெறும் கவுரவக் கொலைகள், இஸ்லாமிய விதிமுறை அல்ல மற்றும் இவை மன்னிக்கப்பட முடியாத பாவம் என்று சொல்லி, இக்கொலைகளுக்கு எதிரான கண்டனத்தை வெளியிட்டுள்ள, அந்நாட்டின் இஸ்லாமியக் குழுக்களின் நடவடிக்கையை வரவேற்றுள்ளார் கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவர்.   

பாகிஸ்தான் துறவு சபை தலைவர்கள் கழகத்தின் நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் அருள்பணி Abid Habib அவர்கள், சுன்னிப் பிரிவு இஸ்லாமின் Ittehad அவையின் அறிக்கை நல்லதொரு முயற்சி என்று கூறினார்.

இந்த அறிக்கைக்குப் பலர் செவிசாய்ப்பார்கள் என்ற நம்பிக்கையையும் அக்குரு தெரிவித்தார்.

தங்களின் வாழ்க்கைத் துணைவரைத் தாங்களாகவே தெரிவுசெய்து திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் உயிரோடு எரிக்கப்படுவது, இஸ்லாமியப் போதனைகளுக்கு முரணானது என, பாகிஸ்தானின் சுன்னிப் பிரிவு இஸ்லாம் அவை கூறியுள்ளது.

எந்த ஒரு கொலையையும் கவுரவம் என்ற பெயரில் கருதி அதை நியாயப்படுத்த முயற்சிப்பது, மதத்திற்கு எதிரான கொள்கையைக் கொண்டிருப்பவர் என்றும் அந்த அவை அண்மையில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.  

பாகிஸ்தானின் மனித உரிமைகள் அவையின் கூற்றுப்படி,  அந்நாட்டில், கவுரவம் என்ற பெயரில், கடந்த ஆண்டில், 500க்கும் மேற்பட்டவர்களும், இவ்வாண்டில் இதுவரை 233 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது. இக்கொலைக் குற்றத்தில் சந்தேகிக்கப்படுவரில் பலர் விசாரிக்கப்படுவதே இல்லையென்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.