2016-06-15 17:04:00

உரிமை மீறப்படும் வயதானவர் குறித்த விழிப்புணர்வு தினம்


ஜூன்,15,2016. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 2030ம் ஆண்டின் 17 வளர்ச்சித்திட்ட இலக்குகளை எட்டுவதற்கு, வயது முதிர்ந்தவர் புறக்கணிப்படுதல், அவர்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் மற்றும் வன்முறை நிறுத்தப்பட வேண்டியது இன்றியமையாதது என்று, ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

வயது முதிர்ந்தோர் எதிர்நோக்கும் உரிமை மீறல்கள் குறித்த உலக விழிப்புணர்வு தினத்திற்கென செய்தி வெளியிட்ட பான் கி மூன் அவர்கள், வயதானவர்கள், உளவியல் மற்றும் உணர்வு ரீதியான உரிமை மீறல்களை எதிர்கொள்வதோடு, நிதி சார்ந்த விவகாரத்திலும் பயன்படுத்தப்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.

சில நாடுகளிலுள்ள வயது முதிர்ந்தோரில் பத்து விழுக்காட்டினர் உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக நலவாழ்வு நிறுவனம் கணித்துள்ளதைக் குறிப்பிட்டுள்ள அவர், வயது முதிர்ந்த ஆண்களைவிட பெண்கள், வயதாலும், பாலினப் பாகுபாட்டாலும் அதிகம் துன்புறுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

வயது முதிர்ந்த பெண்கள், பில்லிசூனியக்காரர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் தங்களின் சொந்தக் குடும்பங்கள் மற்றும் குழுக்களாலேயே துன்புறுத்தப்படுகின்றனர் என்றும், வயதானவர்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகள் அகற்றப்பட வேண்டுமென்றும் கேட்டுள்ளார் பான் கி மூன்.

வயதானவர்களைத் துன்புறுத்துவதை நாம் நிறுத்தலாம் என்ற தலைப்பில், ஜூன் 15, இப்புதனன்று, வயது முதிர்ந்தோர் எதிர்நோக்கும் உரிமை மீறல்கள் குறித்த உலக விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.