2016-06-15 16:23:00

இரக்கத்தின் தூதர்கள் – அருளாளர் அன்னை தெரேசா பாகம் 3


ஜூன்,15,2016.  அது 1950ம் ஆண்டு. அன்னை தெரேசா அவர்கள், திரு.கோமஸ் அவர்களை அழைத்துக்கொண்டு கொல்கத்தா, டிராம் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்கள். அந்த இடத்திற்கு நேர் எதிரே இருந்த பெரிய அரசு மருத்துவமனை முகப்பில், ஒரு பெரிய மரத்தடியில் ஒருவர் முடங்கிக் கிடந்தார். அன்னை தெரேசா, அந்த மனிதரையே உற்றுப் பார்த்துவிட்டு, கோமஸ், இவ்வளவு பெரிய மருத்துவமனைக்கு வெளியில்தானே இந்த மனிதர் முடங்கிக் கிடக்கிறார், இவரைப் பற்றி யாருமே அக்கறை கொள்ளவில்லையே? என்றார். அதற்குள் டிராம் வந்துவிட்டது. இருவரும் அதில் ஏறினார்கள். இரண்டு மணிநேரம் கழித்து இருவரும் இல்லம் திரும்பினார்கள். அன்னை தெரேசா, டிராமைவிட்டு இறங்கியவுடன் நேராக அந்த மனிதர் கிடந்த இடத்திற்குச் சென்றார். ஆனால் அந்த மனிதர் பிணமாகக் கிடந்தார். அன்னை கோமசிடம், இந்த மனிதர் இறப்பதற்குமுன் ஒரு டம்ளர் தண்ணீருக்காக ஏங்கியிருப்பார், அதுகூட கிடைக்காமல் இவர் மனம் என்ன பாடுபட்டதோ, யாருக்குத் தெரியும்? என்றார். அன்னையின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. மறுநொடியே உறுதியுடன் இப்படி கூறினார்

“கோமஸ், இந்த மனிதர்கள் அழகாக வாழத்தான் கொடுத்து வைக்காதவர்கள். அழகாக இறப்பதற்காகவாவது நாம் வழி செய்யலாம் அல்லவா…”

அன்றிலிருந்து அன்னை தெரேசா, நடைபாதையில் இறுதி மூச்சை இழுத்துப் பிடிக்க வகை தேடிய மனிதர்களுக்கு இல்லம் தேடி அலைந்தார். கொல்கத்தா மாநகராட்சியிடம் முறையிட்டு இடம் கேட்டார்கள். மாநகராட்சிக்கும் தலைவலியாய் இருந்த பிரச்சனைக்கு அன்னை முடிவு சொல்வதுபோல் இருந்தது. கொல்கத்தாவிற்குக் கம்பீரம் தரும் காளிகோவிலையொட்டியிருந்த பயணிகள் தங்கும் தர்மசாலா மாநகராட்சியிடம் இருந்தது. அதை 1952ம் ஆண்டில் மாநகராட்சி, அன்னைக்குக் கொடுத்தது. இதற்கு அக்கோவில் பக்தர்களும், அர்ச்சகர்களும் எதிர்ப்புக்கொடி காட்டினார்கள். யாராவது இறப்பவர்களுக்கு இல்லம் அமைப்பார்களா, வாழ்க்கைப் போராட்டத்தில் கை கொடுத்தால் அது மனிதாபிமானம். மரணப்படுக்கையில் மரணித்துப்போய் இருப்பவர்களுக்கு அன்பைப் பொழிவது அர்த்தமற்ற போலித்தனம் என்றெல்லாம் புகார்கள் எழுந்தன.

தனது நோக்கம் மதமாற்றம் இல்லை என்பதை நம்பி, எதற்கும் அஞ்சாது, பின்வாங்காது, மறைப்பணியாளர் அறக்கட்டளை என்ற பெயரில் அன்னை தெரேசா தனது பணியைத் தொடங்கினார். தனக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர்களுக்கு அன்னை அளித்த ஒரே பதில்... எல்லாருக்கும் இது தேவையானது.

கொல்கத்தா காவல்துறையின் உதவியுடன் பல நாள்கள் தனது பணியைச் செய்தார் அன்னை தெரேசா. காளிகோவில் அர்ச்சகர்கள் அன்னையை அந்த இடத்தைவிட்டு அப்புறப்படுத்த பெரும் முயற்சி செய்தனர். அன்னை அவர்களைச் சந்தித்து, என்னை, எது வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் இந்த ஏழைகளை எதுவும் செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். அந்தக் கோவில் தலைமை அர்ச்சகர் காசநோயால் மிகவும் துன்புற்றார். பிறரால் கைவிடப்பட்டார். அன்னை அவரை தர்மசாலாவில் வைத்துப் பராமரித்து சிகிச்சை அளித்தார். அந்த அர்ச்சகர் உயிர்விடும்போது இப்படிச் சொன்னார்.

அன்னையே, நான் இத்தனை நாளாக காளிக்குச் செய்த சேவை வீண்போகவில்லை. காளியின் மடியில் எனது உயிர் பிரிய வரம் தந்துவிட்டாள்.

ஆம். காளி தெய்வத்தின் வடிவில் அன்னையைக் கண்டார் அர்ச்சகர். இந்த இறப்போர் இல்லமே அன்னை தெரேசா தொடங்கிய முதல் இல்லம். இந்த இல்லமே நிர்மல் ஹிர்தய் இல்லம். அதாவது நிர்மலமான இதய இல்லம். 

திருத்தந்தை பிரான்சிஸ் அண்மையில்(ஜூன்,02) பல நாடுகளின் அருள்பணியாளர்களிடம்,

கடவுளின் பெயர் இரக்கம், இது, அளப்பரிய கடவுளின் அன்பு, பொங்கி வழியும் அன்பு. என்றார். இதைத்தான் அன்னை தெரேசா வாழ்க்கையின் இறுதி நிலையில் இருந்தவர்களுக்கு வழங்கினார். அவர்கள் இறுதி மூச்சை விடும்போதாவது, கடவுளின் இரக்கத்தை அனுபவிக்கட்டும் என இல்லத்தை ஆரம்பித்தார். அல்பேனியாவிலிருந்து இந்தியாவுக்கு, குறிப்பாக, வங்காளத்திற்கு மறைப்பணியாற்ற வந்த இயேசு சபை அருள்பணியாளர்கள் எழுதிய கடிதங்கள், கொல்கத்தா சென்று மறைப்பணியாற்ற வேண்டுமென்ற ஆவலை அதிகம் தூண்டியது. அந்நகரில் லொரேத்தோ அருள்சகோதரிகள் பணிபுரிவதைக் கேள்விப்பட்டார். அதனால் அச்சபையில் சேர விரும்பினார் அன்னை தெரேசா. ஆனால் இளவயதிலே இந்த ஆர்வம் ஏற்பட்டதால் அதை எளிதில் இவர் அடையவில்லை. பன்னிரண்டு வயதில் இப்படியொரு இலட்சியம் சாத்தியமா என்ற கேள்வியைச் சந்தித்தார். ஆயினும் அயர்லாந்து சென்று கன்னியர் பயிற்சியை முடித்து கொல்கத்தா வந்தார். 1929ம் ஆண்டு என்டேலி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். கண்டிப்பான ஆசிரியராக, அதேநேரம், கனிவும் அக்கறையும் கொண்டவராகப் பணியாற்றினார் அருளாளர் அன்னை தெரேசா.

லொரேத்தோ அருள்சகோதரிகள் சபையைவிட்டு விலகி புதிய பணியைத் தொடங்கத் தீர்மானித்த அன்னையின் டார்ஜிலிங் இரயில் பயணம் பற்றி  அடுத்த நிகழ்ச்சியில் பார்ப்போம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி  








All the contents on this site are copyrighted ©.