2016-06-14 13:23:00

விவிலியம் : காலமெலாம் வாழும் கருணைக் கருவூலம் - பகுதி – 26


சில ஆண்டுகளுக்கு முன் பார்த்த தமிழ் திரைப்படம் ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன்.  என்ன படம் என்பது தேவையில்லை. ஏறத்தாழ எல்லாத் தமிழ் திரைப்படங்களிலும் வரும் கதைதான். சமுதாயத்திற்கெதிராகத் தீமைகள் செய்யும் வில்லன்களை, தனி ஆளாய்த் தீர்த்துக்கட்டும் ஹீரோ, இந்தத் திரைப்படத்திலும் காட்டப்பட்டார். அண்மைய ஆண்டுகளில், நமது நாயகர்கள் ஏதாவது ஒரு வசனத்தை, அல்லது, ஒரு செய்கையை, திரைப்படம் முழுவதும் அடிக்கடிச் சொல்வார்கள், செய்வார்கள். மக்களின் ஆரவாரக் கைத்தட்டலைப் பெறுவார்கள்.

அதேபோல், இந்தத் திரைப்படத்திலும் நடந்தது. தீமை செய்பவர்களை ஹீரோ சந்திப்பார். அடித்து நொறுக்குவார். அவரது அடிகளைத் தாங்கமுடியாமல் அவர்கள் மன்னிப்பு கேட்பார்கள். உடனே அவர், "மன்னிப்பு... எனக்குப் பிடிக்காத ஒரு வார்த்தை." என்று சொல்வார். இப்படி சொல்லிவிட்டு, மன்னிப்பு கேட்டவர்களைத் தீர்த்துக்கட்டுவார். திரை அரங்கில் விசிலும், கைத்தட்டலும் ஒலிக்கும். நீதி, நியாயம் என்ற பெயரில் நம் திரைப்படங்களில் வன்முறைகளை சர்வ சாதாரணமாக செய்யும் நம் நாயகர்களுக்கு மன்னிப்பு என்ற வார்த்தை பிடிக்காது. மன்னிப்பு என்ற வார்த்தை அவர்கள் அகராதியிலேயே கிடையாது என்றும் ஒரு சில நாயகர்கள் வசனம் பேசியிருக்கிறார்கள்.

நம் திரைப்பட நாயகர்களுக்கு இணையான ஒருவரை மையப்படுத்தி இயேசு கூறிய உவமை - மன்னிக்க மறுத்த பணியாள் உவமை (மத்தேயு 18: 21-35). புனித மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணப்படும் தனித்துவம் மிக்க உவமைகளில் ஒன்று, 18ம் பிரிவில் காணப்படும் 'மன்னிக்க மறுத்த பணியாள் உவமை'. இந்த உவமை, 'நன்றியற்ற பணியாள் உவமை', 'இரக்கமற்ற பணியாள் உவமை', 'கொடுமையான பணியாள் உவமை' (Ungrateful Servant, Unmerciful Servant, or Wicked Servant) என்று பலவாறாகப் பெயர் பெற்றுள்ளது. நன்றி, இரக்கம், மன்னிப்பு இவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது என்பதையும், இவை இல்லாதபோது, அங்கு கொடுமை தோன்றுகிறது என்பதையும் இந்த வேறுபட்டத் தலைப்புக்கள் நமக்கு உணர்த்துகின்றன.

இவ்வுவமை, எந்தச் சூழலில் சொல்லப்பட்டது என்பதைச் சிந்திப்பது பயனளிக்கும். ஒருவர் தவறு செய்யும்போது, அவரை எத்தனை முறை மன்னிப்பது?... நம் எல்லாருக்கும் எழும் இந்தக் கேள்விதான், பேதுருவுக்கும் எழுந்தது. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும்வண்ணம், இயேசு, 'மன்னிக்க மறுத்த பணியாள் உவமை'யைக் கூறினார். ஆனால், அந்த உவமையைக் கூறுவதற்கு முன், அவருக்கும் பேதுருவுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல், உன்னதமான, அதேவேளை, கடினமான சவால்களை நமக்குமுன் வைக்கின்றது. இதோ அந்த உரையாடல்:

மத்தேயு நற்செய்தி 18: 21-22

அக்காலத்தில் பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா?” எனக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம் கூறியது: “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.”

ஏழு முறை மன்னிக்கலாமா? இது பேதுருவின் கேள்வி. ஏழு முறை மட்டுமல்ல, எழுபது தடவை ஏழுமுறை... இது இயேசுவின் பதில். 70x7=490... தயவு செய்து கணக்கு போட ஆரம்பிக்காதீர்கள். இயேசுவுக்கும் பேதுருவுக்கும் இடையே நடந்தது, கணக்குப் பாடம் அல்ல. வாழ்க்கைப் பாடம். இங்கு பேசப்படுவது எண்கள் அல்ல, எண்ணங்கள்.

இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு சில எண்கள் பொருளுள்ளவையாக இருந்தன. 7,12,40 என்ற எண்கள் விவிலியத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில், 7 என்ற எண், நிறைவைக் குறிக்கும் ஓர் எண். எனவே, “தவறு செய்யும் என் சகோதரனை அல்லது சகோதரியை ஏழு முறை மன்னிக்கலாமா?” என்ற இந்தக் கேள்வியை பேதுரு கேட்டபோது, ஏதோ பெரியதொரு சாதனையைப் பற்றி, ஒரு நிறைவான முயற்சியைப் பற்றி தான் பேசிவிட்டதாக அவர் எண்ணியிருக்கலாம். இயேசுவோ, எண்களைத் தாண்டி, கணக்கையெல்லாம் தாண்டி எப்போதும் மன்னிக்கவேண்டும் என்ற எண்ணத்தைச் சொன்னார்.

இயேசு சொன்னதை இப்படி நான் கற்பனை செய்து பார்க்கிறேன். “பேதுருவே, நீ கேட்கும் கேள்வி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ‘எத்தனை முறை மன்னிக்க வேண்டும்’ என்று நீ கேட்பது, ‘எத்தனை முறை சுவாசிக்க வேண்டும்’ என்று கேட்பது போல் உள்ளது. சுவாசிப்பதற்கு ஒரு கணக்கா? சுவாசிப்பதற்கு கணக்கு பார்த்தால், உடல் இறந்துவிடும். அதேபோல், மன்னிப்பதற்கு கணக்கு பார்த்தால்... உள்ளம் இறந்துவிடும்.” இப்படிச் சொல்வதற்கு பதில், இயேசு "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை" என்று கூறினார்.

இயேசு பேதுருவுக்குப் போதித்ததைத் தன் வாழ்வில் கடைபிடித்தார். அவரைப் பொருத்தவரை மூச்சு விடுவதும், மன்னிப்பதும் அவரது இயல்பாகவே மாறியிருந்தன. தனக்குப் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்றும், பழிக்குப் பழி தனக்குப் பிடித்த செயல் என்றும் நமது நாயகர்கள் திரைப்படங்களில் பறைசாற்றும் காட்சிகளுக்கு நேர் மாறான ஒரு நிகழ்ச்சி, அன்று, கல்வாரியில் நடந்தது. விடுகின்ற ஒவ்வொரு மூச்சுக்கும் சிலுவையில் மரண போராட்டம் நடத்திவந்த இயேசு, தனக்கு மிகவும் பிடித்த ஒரு சொல், தன் இயல்பாகவே மாறிவிட்ட ஒரு செயல், மன்னிப்பு என்பதை நிரூபித்தார். தன்னை மூன்று நாட்களாய் பல வகையிலும் சித்ரவதை செய்தது போதாதென்று, சிலுவையில் அறைந்தபின்னும் தன்னைச் சுற்றி நின்று கேலிசெய்து கொண்டிருந்த உரோமைய வீரர்களையும், அவர்களுக்குப் பின்புலமாய் இருந்து அவர்களைத் தூண்டிய அரசுத் தலைவர்களையும், மதத் தலைவர்களையும் இயேசு மனதார மன்னித்தார். இறைவனும், அவர்களை மன்னிக்க வேண்டுமென மன்றாடினார். 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை' (லூக்கா 23:34) என்று சொன்னார். மிருகங்களாய் மாறிவிட்ட மனிதர்களைப் பழிவாங்க, நமது திரைப்பட நாயகர்கள், மிருகங்களாய் மாறுவர். இயேசுவோ, மிருகங்களாய் மாறி தன்னை வதைத்த மனிதர்களை, மீண்டும் மனிதர்களாய் மாற்ற சிலுவையில் மன்றாடியபோது, தெய்வமாக மாறினார்.

எந்த ஒரு மனிதரும் மிருகமாகவோ, மனிதராகவோ, புனிதராகவோ, தெய்வமாகவோ வளர அவரது பிறப்பு, வளர்ப்பு இன்னும் பல காரணங்கள் உள்ளன. சிறு வயதில் கற்றுக்கொள்ளும் பாடங்கள் இறுதி வரை ஒருவரின் வாழ்வை உருவாக்கும், மாற்றும் என்பது நமக்குத் தெரிந்த உண்மைகள். இயேசுவின் வாழ்க்கையைக் கொஞ்சம் சிந்திப்போம். அவர் சிறு வயது முதல் உரோமைய அராஜகத்தைப் பல வழிகளிலும் பார்த்து வளர்ந்தவர். அந்த அராஜகத்தை ஒழிக்க, அந்த அராஜகத்தை வெல்ல, அவரும் ஆசைபட்டிருப்பார். ஒன்றை வெல்வதற்கு, அதைக் கொல்லவேண்டுமென்று கட்டாயம் இல்லையே. வேறு வழிகள் உள்ளனவே. அவற்றில் மிகவும் உன்னதமான வழி, அன்பு வழி. அன்பினால் எதையும் வெல்லமுடியும் என்பதைத்தான், இயேசு, தன் வாழ்வில், சிறப்பாக, சிலுவை மரணத்தில் நிரூபித்தார்.

அன்பு, பாசம், மன்னிப்பு என்ற உன்னத உணர்வுகளை பேணி வளர்க்கும் நாற்றங்காலாய் இருப்பது குடும்பங்கள். சிறு வயது முதல் அன்பு, பாசம், மன்னிப்பு என்ற உன்னத உணர்வுகளை இயேசுவுக்குப் போதித்து, அவருக்கு வழிகாட்டி வாழ்ந்துவந்த மரியா, யோசேப்பு இருவரையும் நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டும். அவர்கள் சொல்லித்தந்தவைகளும், அவர்கள் வாழ்ந்த விதமும் இயேசுவை உருவாக்கியிருக்க வேண்டும். குழந்தை இயேசுவுக்கு, சிறுவன் இயேசுவுக்கு, அவரது பெற்றோர், மன்னிப்பை, ஊட்டி வளர்த்திருக்க வேண்டும். இப்படி ஓர் அன்புச்சூழலில் அவர் வளர்ந்து வந்ததால், அவரால் பரந்த மனம், பரந்த பார்வை இவற்றைப் பெற முடிந்தது.

 

பிறந்தது முதல் பல கொடுமைகளுக்கு உள்ளாகி, அதனால் மனம், உடல் அனைத்தும் கசப்பில், வெறுப்பில் தோய்ந்திருக்கும் குடும்பங்களை, குறிப்பாக, அத்தகையச் சூழலில் வளரும் குழந்தைகளை எண்ணிப் பார்ப்போம், அவர்களுக்காக வேண்டுவோம். கசப்பும், வெறுப்பும் சூழ்ந்த கடலில் மூழ்கியிருக்கும் இக்குடும்பங்களில், மன்னிப்பு என்ற முத்துக்களும் தோன்றுகின்றன. மரணம் என்ற பேரிழப்பையும் தாண்டி, அன்பும், மன்னிப்பும் வாழ முடியும் என்பதை கல்வாரியில் உணர்த்திய இயேசுவைப் போல், நாம் வாழும் 21ம் நூற்றாண்டில் பலர் நமக்கு உணர்த்தி வருகின்றனர். அவர்களில், பாலஸ்தீனிய நாட்டில் வாழும் ஓர் ஏழை தம்பதியர் என் நினைவை இப்போது நிறைக்கின்றனர்.

2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இரமதான் பண்டிகை காலத்தில், Ahmed Khatib என்ற பாலஸ்தீனிய சிறுவன் ஒருவன், இஸ்ரேல் வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொம்மைத் துப்பாக்கியை, உண்மைத் துப்பாக்கி என்று நினைத்த இஸ்ரேல் வீரர்கள் Ahmedஐச் சுட்டனர்.

தங்கள் தவறை உணர்ந்ததும், இஸ்ரேல் வீரர்கள், உடனே, அச்சிறுவனை, இஸ்ரேல் பகுதியில் இருந்த ஒரு மருத்துவ மனைக்கு எடுத்துச்சென்றனர். அவனது பெற்றோரையும் அழைத்துச் சென்றனர். Ahmedஐக் காப்பாற்ற முடியவில்லை. அந்நேரத்தில் அந்தத் தாயும், தந்தையும் அற்புதம் ஒன்றைச் செய்தனர். அவர்கள் இருவரும் Ahmedன் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன் வந்தனர். அவர்கள் அந்த உறுப்பு தானத்தை இஸ்ரேல் பகுதியில் இருந்த மருத்துவமனையிலேயே செய்ததைக் கேள்விப்பட்ட பாலஸ்தீனியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் கோபமடைந்தனர். தங்கள் மகனைக் கொன்றது, இஸ்ரேல் படை என்று தெரிந்தும், அந்தப் பகுதியிலேயே தங்கள் மகனின் உறுப்புக்களை அவர்கள் தானம் செய்தது, மன்னிப்பின் சிகரம்!

Ishmael, Ablah என்ற அந்த பெற்றோர் எளிய மக்கள். Ishamael அவர்கள், இரு சக்கர வாகனங்களைப் பழுதுபார்க்கும் ஒரு மெக்கானிக். அவ்விருவரும் செய்த உன்னதச் செயலைப் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, Ishmael சொன்னது இதுதான்: "என் மகனின் உறுப்புக்கள் வழியே வாழப்போகும் இஸ்ரேல் மக்கள், இனிமேலாகிலும் சமாதானத்தை விரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்த உறுப்புகளை நாங்கள் தானம் செய்தோம்." அந்தப் பெற்றோரை, இஸ்ரேல், பாலஸ்தீனிய அரசுகள் பாராட்டின. பல தீவிரவாத குழுக்களும் பாராட்டின. பன்னாட்டு அரசுகள் கொண்டுவர முயன்றும் முடியாத பாலஸ்தீனிய, இஸ்ரேல் ஒப்புரவை, ஓர் எளிய மெக்கானிக் அவர்களின் குடும்பம், ஒரு சிறிய அளவில் கொண்டுவந்தது என்பது, மறுக்கமுடியாத உண்மை. இது போன்ற ஆயிரமாயிரம் சம்பவங்கள் நடக்கின்றன. இனியும் நடக்கும். நம் வாழ்விலும் மன்னிப்பை தந்த நேரங்கள், பெற்ற நேரங்கள் அப்போது நாம் அடைந்த அந்த நிம்மதி, நிறைவு இவற்றை எண்ணிப் பார்ப்போம்.

இயேசு தன் இறுதி மூச்சு வரை மன்னிப்பை தன் சுவாசமாக்கியதுபோல் கோடிக் கணக்கான மக்கள் மன்னிப்பை வாழ்க்கையில் கடைபிடித்துள்ளனர். அவர்களில் ஒருவரான நெல்சன் மண்டேலா அவர்களைப் பற்றி சென்ற விவிலியத்தேடலில் நாம் சிந்தித்தோம். நெல்சன் மண்டேலா அவர்கள் வழங்கிய மன்னிப்பினால், இனவெறியில் மூழ்கியிருந்த தென்னாப்ரிக்க சமுதாயம் நலமடைந்ததா என்று நமக்குத் தெரியாது, ஆனால், மண்டேலா அவர்கள் முற்றிலும் நலம் பெற்றார் என்பதை இவ்வுலகம் புரிந்துகொண்டது. நாம் வழங்கும் மன்னிப்பினால் மற்றவர்கள் பெறும் நன்மையைவிட, நாம் பெறும் நன்மையே அதிகம் என்பதை, ஓர் அழகிய ஆங்கிலக் கூற்று இவ்வாறு கூறுகிறது: "Forgive others not because they deserve forgiveness; but because you deserve peace" அதாவது, "மற்றவர்களுக்கு மன்னிப்பு வழங்கு, அவர்களுக்கு மன்னிப்பு தேவை என்பதால் அல்ல; உனக்கு அமைதி தேவை என்பதால், மன்னிப்பு வழங்கு."

மனித குடும்பம் இன்று அனுபவித்துவரும் பல நோய்களுக்குத் தேவையான ஓர் அற்புத மருந்து, மன்னிப்பு. நம் ஒவ்வொருக்குள்ளும் ஊற்றெடுக்கும் இந்த அற்புத மருந்தை மறந்துவிட்டு, அல்லது நமக்குள்ளேயே மறைத்து, புதைத்துவிட்டு, வெறுப்பு என்ற விஷத்தை நாம் வெளிக் கொணர்கிறோம். இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், மன்னிப்பு என்ற மருந்தால் இவ்வுலகின் பல நோய்கள் குணமாகவேண்டும், வெறுப்புத் தீயில் பற்றியெரியும் இவ்வுலகம் மன்னிப்பு மழையில் நனைந்து மகிழவேண்டும் என்று மன்றாடுவோம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.