2016-06-14 16:58:00

சிங்கப்பூருக்குச் செல்லும் குடியேற்றதாரர்க்கு JRS உதவி


ஜூன்,14,2016. சிங்கப்பூருக்குச் செல்லும் குடியேற்றதாரர் பணியாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களுக்கு, கல்வியையும், பிற உதவிகளையும் ஆற்றி வருகிறது சிங்கப்பூர் இயேசு சபை புலம்பெயர்ந்தவர் அமைப்பு.

ஜூன் 20, வருகிற திங்களன்று உலக புலம்பெயர்ந்தவர் தினத்தைச் சிறப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டுவரும் இவ்வமைப்பு, தென்கிழக்கு ஆசியாவில் புலம்பெயர்ந்த மக்கள் பற்றிய அருங்காட்சியகம், இரக்கம் பற்றிய காணொளிப்படம், புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் திருப்பலி உட்பட பல நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது.

இயேசு சபை புலம்பெயர்ந்தவர் அமைப்பின் சிங்கப்பூர் கிளை, மியன்மார் மற்றும் இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் குடியேற்றதாரர்க்கு முக்கியமாக உதவி வருகிறது. புலம்பெயர்ந்தவர் முகாம்களில் இலவசக் கல்வி வழங்குவதோடு, அவர்களின் சொந்த நாடுகளுக்குத் தன்னார்வலர்களையும் அனுப்புகின்றது சிங்கப்பூர் JRS அமைப்பு.

புகலிடம் தேடுவோர் மற்றும் புலம்பெயர்ந்தவர் சார்பாக உலகளவில் உழைத்து வரும் JRS என்ற இயேசு சபை புலம்பெயர்ந்த அமைப்பு, 2020ம் ஆண்டுக்குள், உலகளவில் மேலும் ஒரு இலட்சம் புலம்பெயர்ந்தவர்க்கு கல்வி வழங்கத் திட்டமிட்டுள்ளது.

ஐ.நா. UNHCR புலம்பெயர்ந்தவர் நிறுவனத்தின் கூற்றுப்படி, ஏறத்தாழ 5 கோடியே 50 பேர், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் நாட்டுக்குள்ளே இடம் பெயர்ந்தவர்கள் என்று தெரிகிறது.

ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.