2016-06-13 14:04:00

வாரம் ஓர் அலசல் – வலுவின்மையில் வல்லமை


ஜூன்,13,2016. சிறுமி ஜாக்கி (Jackie), இரண்டாம் வகுப்பு படித்தபோது, வகுப்பில் மிகவும் பின்தங்கிய மாணவியாக இருந்தார். நீ ஒரு முட்டாள், சோம்பேறி, கனவா காண்கிறாய், உனக்கு ஆயிரம் தடவை சொல்லியிருப்பேனா என, வகுப்பு ஆசிரியர் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் திட்டுவார். தன்னால் பேச முடியாது என்றே உணர்ந்தார் சிறுமி ஜாக்கி. வாசிக்க எழுந்து நின்றால், தெரிந்தும்கூட, ஒரு வார்த்தையும் வாசிக்க முடியாமல் திணறுவார், கண்ணீர் புத்தகப் பக்கங்களை நனைத்துவிடும். வகுப்பு மாணவிகளோடு உள்ளூர் நூலகம் சென்று ஏதாவது நூல்களை எடுத்துவந்து வாசிக்க முயற்சிப்பார், முடியாது. நண்பர்களோடு சேர்ந்து படிக்க முயற்சிப்பார், அதுவும் முடியாது. அவமானத்தால் கூனிக் குறுகினார். கடைசியில் தனது 15வது வயதில் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி, பின்னர், திருமணமும் செய்து கொண்டார் ஜாக்கி. அன்பான கணவர் கொடுத்த தொடர் ஊக்கத்தால், ஜாக்கியின் வாழ்வு முழுவதும் மாறத் தொடங்கியது. எட்டுக் குழந்தைகளுக்குத் தாயானார் ஜாக்கி. இவரது கணவர், இவரை எப்போதும், தான் இதுவரை கண்டிராத மிகத் திறமையான ஒரு பெண்ணாகவே நடத்தினார். பல ஆண்டுகள் சென்று, ஜாக்கியின் மூத்த மகள் உயர்நிலைப் பள்ளியை முடிப்பதற்கு ஓராண்டுக்கு முன்னதாக, ஜாக்கி அப்பள்ளிப் படிப்பை முடித்தார். ஜாக்கி தொடர்ந்து படித்தார். ஆனால், ஒவ்வொரு நாளும் மிகவும் கஷ்டப்பட்டு படித்தார். ஜாக்கி சொல்கிறார் – இந்தப் படிப்பு எவ்வளவு கடினமாக இருந்தது என்றால், ஒவ்வொரு நாளும் அழுது மடிவேன். எனது கணவர் எனக்குத் தினமும் ஆசீராக இருந்து, உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தார். எனது மகள் கணக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து ஊக்கப்படுத்தினார். நானும் கடவுளிடம் எனது இயலாமையை எடுத்துச் சொல்லி உதவிக்காக மன்றாடினேன். இறுதியில், எனது ஐம்பதாவது வயதில் கல்லூரிப் படிப்பில் பட்டம் பெற்றேன். எனது வலுவின்மை, இறுதியில் எனக்கு வல்லமையாக மாறியது என்று.

அன்பு நேயர்களே, இப்படி சொல்லியிருக்கும் ஜாக்கி, இன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டில், வாசிக்கக் கஷ்டப்படும் சிறார்க்கு உதவிசெய்யும் திட்டத்தை நடத்தி வருகிறார்.  வலுவின்மையில் வல்லமையைப் பெறலாம் என்பதற்கு, ஜாக்கி அவர்களின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு. 1809ம் ஆண்டில் பிறந்த ஆபிரகாம் லிங்கன், வீட்டின் வறுமை காரணமாக, ஓராண்டுதான் பள்ளிக்குச் சென்றார். தந்தையின் தச்சுத் தொழிலைச் செய்யத் தொடங்கினாலும், லிங்கனின் மனம் கல்வியையே நினைத்தது. தந்தைக்கு உதவி செய்துகொண்டே ஓய்வு நேரத்தில் எழுத வாசிக்கக் கற்றுக்கொண்டார். தச்சு வேலையில் போதிய வருவாய் இல்லாததால் மளிகைக் கடையிலும் வேலை செய்தார். கோடரி பிடித்த அவரது கைகள் சட்டப் புத்தகத்தை எடுத்தது. சட்டம் படித்து பட்டம் பெற்றார். வழக்கறிஞர் ஆனார். பின்பு இராணுவத்திலும் பணியாற்றினார். அப்போதைய அமெரிக்க அடிமைமுறை சிறுவயதிலேயே லிங்கனை வெகுவாகப் பாதித்தது. அடிமைமுறையை ஒழிக்க மனதில் உறுதி கொண்டார். அமெரிக்க அரசுத்தலைவராகப் பதவியேற்ற பின்னர், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அடிமை முறையையும் ஒழித்தார். நான்காண்டுகள் அமெரிக்காவில் நடந்த உள்நாட்டு போரினால் துண்டு துண்டாக சிதறி இருந்த அமெரிக்காவை ஒன்றுபடுத்தினார். அதனால் அமெரிக்காவின் தந்தை எனவும் போற்றப்படுகிறார். 

படிக்க வசதியில்லை என்பதால் பள்ளி, கல்லுாரிகளுக்குப் போக முடியாமல் தவிக்கிற மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை தருகிறார் மதுரை, வில்லாபுரம் பராசக்தி நகரைச் சேர்ந்த பாண்டீஸ்வரி. தள்ளுவண்டிக் கடையில் பலகார வியாபாரத்தை நடத்தி, அதன் மூலம் வரும் வருமானத்தில் எம்.பி.ஏ. படித்துக்கொண்டிருக்கிறார் பாண்டீஸ்வரி. இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுக்கு மத்தியிலும் தள்ளுவண்டிக் கடைக்கு விடுப்பு விடவில்லை. பாண்டீஸ்வரி சொல்கிறார்..

“அப்பா கருப்பையா ஆட்டோ டிரைவர். அம்மா மாரியம்மாள் இல்லத்தரசி. எனக்கு இரண்டு அண்ணன்கள், ஒரு அக்கா. அக்காவுக்கும், ஒரு அண்ணனுக்கும் கல்யாணமாகிடுச்சி. இன்னொரு அண்ணன் பத்தாவதுவரை படிச்சிட்டு, கிடைச்ச வேலைக்குப் போறார். வீட்டு செலவுக்குப் பணம் கொடுக்க மாட்டார். அப்பாவுக்கு இதயத்துல கோளாறு வந்த பிறகு அவரோட மருத்துவச் செலவுக்கே வருமானம் சரியா இருந்தது. அதனால என்னால் ப்ளஸ் டூவுக்கு மேல படிக்க முடியலை. காசு இல்லைன்னு படிப்பை நிறுத்த மனசில்லை. எங்கம்மா வீட்டில் ருசியா வடை சுடுவாங்க. அவங்க கைப்பக்குவத்தில் வடை சுட்டு வியாபாரம் செய்தால் அதில் கிடைக்கும் பணத்துல படிக்கலாம்னு தோணுச்சு. என் எண்ணத்தை அம்மாகிட்டே சொன்னேன். அம்மாவுக்கும் என்னை நல்லா படிக்க வைக்கணும்னு ஆசை. அதனால என்னோட யோசனையை ஏத்துக்கிட்டாங்க. நானும் அம்மாவும் சேர்ந்து, மதுரை ஜவுளிகடை பஜாரான கீழமாசி வீதியில் தள்ளுவண்டி கடை போட்டோம். வேலைபார்த்துக்கிட்டே மதுரை மீனாட்சி கல்லுாரியில் பி.பி.ஏ. சேர்ந்தேன். கல்லூரி முடிந்ததும் வீட்டுக்குச் செல்லாமல் நேராக கடையைக் கவனிக்க வந்துவிடுவேன். இரவு பத்து மணிவரை வியாபாரம் நடக்கும். இப்ப எம்.பி.ஏ. படிக்கிறேன். நல்ல வேலை கிடைச்சதும், அம்மா, அப்பாவை உட்கார வைத்து சாப்பாடு போடணும். இரண்டு வருஷம் சம்பாதிச்சிட்டு, என்னோட அடுத்த லட்சியமான ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகணும். படிக்கவே முடியாதுங்கற நிலையில என்னோட படிப்பைத் தொடர இந்தத் தள்ளுவண்டி கடை கைகொடுத்துச்சு. அதே மாதிரி என்னோட கலெக்டர் கனவும் நிறைவேறும் (நன்றி தி இந்து)”என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் பாண்டீஸ்வரி. தன்னை மிரட்டிய வறுமையை எதிர்த்து நின்று வென்றிருக்கிறார் பாண்டீஸ்வரி.

இதேபோல், என் அப்பா, அம்மாவுக்கு கூலி வேலைதான். வறுமையான குடும்பம்தான். அரசுப் பள்ளியில்தான் படித்தோம்... ஆனாலும் அசத்தலா மார்க் வாங்கியிருக்கோம்!’ என்று, தமிழகத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில், ஏழ்மை நிலையிலும் ஏராளமான  மதிப்பெண்களைக் குவித்துள்ள மாணவிகளின் சாதனை மிகவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. பொள்ளாச்சி மாவட்டம், மலையாண்டி பட்டணம், அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த ஜனனி, 498/500 மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறார். ஜனனி சொல்கிறார் - எங்கப்பா தையல் தொழிலாளி. நானும் என் அண்ணனும் எங்க வீட்டுக்குக்குப் பக்கத்துல இருக்குற அரசுப் பள்ளியில படிச்சோம். வீட்டுல பணக் கஷ்டம் இருந்தாலும், நீங்க நல்லாப் படிக்கணும்னு அப்பா சொல்லிட்டே இருப்பார். நான் 498 மார்க் எடுத்து இருக்கேன் என்று.

அன்பு நெஞ்சங்களே, ஜூன் 12 ஞாயிறு, உலக சிறார் தொழிலாளர் எதிர்ப்பு தினம், ஜூன் 13, திங்கள், உலக அல்பனீசம் நோய் விழிப்புணர்வு தினம், ஜூன் 14, செவ்வாய், உலக இரத்த தானம் தினம், ஜூன் 15, வயதானவர்களின் உரிமை மீறப்படுவது குறித்த உலக விழிப்புணர்வு தினம், ஜூன் 17, வெள்ளி, நிலங்கள் பாலைநிலங்கள் ஆக்கப்படுவதை ஒழிக்கும் உலக தினம்... இப்படி சில உலக தினங்கள் இந்த வாரத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன. குடும்பத்தின் வறுமையால், கட்டாயத் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்டு, குழந்தைப்பருவ உரிமை மீறல்களை எதிர்நோக்கும் வலிமையற்ற சிறாரை, வல்லமைபடைத்தவர்களாக ஆக்குவது பெற்றோர் மற்றும் சமூகத்தின் கரங்களில் உள்ளது. அல்பனீசம் நோயால் தாக்கப்பட்டு, குடும்ப உறுப்பினர்களாலேயே ஒதுக்கப்பட்டு, கொல்லப்படும் அவலத்தை எதிர்நோக்கும் பலவீனமான சமூகத்தின் உரிமைகளை வலுப்பெறச் செய்வதும் சமுதாயத்தின் பொறுப்பாகும். 60க்கும், அதற்கு மேற்பட்ட வயதை உடைய மக்களும் 1995ம் ஆண்டில் 54 கோடியே 20 இலட்சமாக இருந்தனர். அது 2025ம் ஆண்டில் ஏறத்தாழ 120 கோடியை எட்டும் எனச் சொல்லப்படுகின்றது. அனுபவ அறிவிலும், ஞானத்திலும் முதிர்ந்த இந்த மூன்றாவது வயதினர் ஏற்கப்பட வேண்டும்.

அன்பு இதயங்களே, வத்திக்கானில் இஞ்ஞாயிறன்று வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மூன்று நாள் சிறப்பு யூபிலி விழா நிறைவடைந்தது. கடந்த சில நாள்களில், உரோம் நகரில் வலிமை குன்றிய, வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலரை, சக்கர நாற்காலிகளில் பார்க்க முடிந்தது. உலகமே புரியாத நிலையிலிருந்த, மனவளர்ச்சி குன்றிய பல்வேறு வயதினரைப் பார்த்தபோது, மனித வாழ்வு பற்றிய பல உண்மைகளைப் பரிந்துகொள்ள முடிந்தது. இவர்களுக்கு யூபிலி விழாத் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ்,

மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் பார்வையிலிருந்து மறைத்து வைக்கப்படக் கூடாது, இவர்கள் அன்புகூரப்பட வேண்டும். ஒருவரின் உடலைப் பராமரிப்பது ஒரு பெரிய தொழிலாக மாறிவரும் இக்காலத்தில், உடலில் முழுமை பெறாமல் இருக்கும் எதுவும், செல்வாக்குப்பெற்ற சிலரின் மற்றும் ஆதிக்க சமூகத்தின் மகிழ்வுக்கும் அமைதிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் நோயாளர்களும், மாற்றுத்திறனாளிகளும் மறைத்து வைக்கப்பட வேண்டும், இந்த மக்கள் மகிழ்வாக வாழ முடியாது என்ற மனநிலை வளர்ந்து வருகின்றது, ஆனால், ஒருவரின் உண்மையான மகிழ்வு, அவரின் அன்புகூரும் திறமையைப் பொருத்தது. நெருக்கடி நிறைந்த சூழலில், இவர்கள் ஏற்கமுடியாதப் பொருளாதாரச் சுமை என்றும் கூறப்பட்டு, கூடியவிரைவில் இவர்களை ஒழித்து விடுவது நல்லது என்றுகூட சில விவகாரங்களில் சொல்லப்படுகின்றது. இவர்களில் வாழ்வின் உண்மையான பொருளைப் புரிந்துகொள்ளத் தவறுபவர்கள், துன்பங்களையும் குறைகளையும் ஏற்கத் தவறுகின்றவர்கள். பவுலடிகளார், வலுவின்மையில்தான் வல்லமை விளங்கும் எனச் சொல்லியுள்ளார்

அன்பு நேயர்களே, உடல் குறைபாட்டால், குடும்பச் சூழலால் அல்லது வேறு எந்தக் காரணத்தாலும் யாரும் வலுவின்றி இருந்தால், அதை ஒரு குறைபாடாக நோக்காமல், வல்லமையாக நோக்க முயற்சிக்க வேண்டும் என்பது அன்பான வேண்டுகோள். எத்தனையோ ஏழைகளும், மாற்றுத்திறன் உள்ளவர்களும் வாழ்க்கையில் சாதிக்கின்றார்கள். அதேநேரம், இத்தகைய மக்களை நாம் ஒதுக்காமல், இவர்களும் மனிதர்கள் என்ற உணர்வில், மனிதர்களாகிய நாம் வாழ்வோம். நம் நிலையை எண்ணிப் பார்த்து இறைவனுக்கு நன்றி சொல்லப் பழகுவோம். பிறவியிலே பார்வையிழந்த ஹெலன் கெல்லர் சொல்கிறார் –

சுய இரக்கமே நமது மோசமான எதிரி. இதை வளரவிட்டோமானால், நம்மால் இந்த உலகில் விவேகமான எதையும் செய்ய முடியாது. நான் எதை வெளியே தேடிக்கொண்டிருக்கிறேனோ, அது எனக்குள்ளே இருக்கிறது. உறுதி மற்றும் நம்பிக்கை இல்லாமல் எதையும் செய்ய முடியாது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.