2016-06-11 16:42:00

சுத்தமான தண்ணீர் கிடைப்பது நீதி சார்ந்த விவகாரமாக உள்ளது


ஜூன்,11,2016. மாபெரும் கலாச்சாரங்கள் ஆற்றங்கரைகளிலே ஆரம்பித்தன, ஆயினும், இந்த நம் காலத்தில், சுத்தமான தண்ணீர் கிடைப்பது, மனித சமுதாயத்தின் செல்வந்தருக்கும், ஏழைகளுக்கும் நீதி சார்ந்த விவகாரமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு சபையினரின் பொறுப்பிலுள்ள வத்திக்கான் வானிலை ஆய்வு மையம் நடத்திய, கோடை காலப் பயிற்சியில் கலந்துகொண்ட பல நாடுகளைச் சேர்ந்த 45 பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

“சூரியக் குடும்பத்திலும், மற்ற இடங்களிலும் தண்ணீர்” என்ற தலைப்பில் இந்த 15வது கோடை காலப் பயிற்சி நடந்துள்ளது, காலத்திற்கேற்ற தலைப்பு என்று பாராட்டிப் பேசிய திருத்தந்தை, இப்பூமியில், நம் வாழ்வுக்குத் தண்ணீர் எவ்வளவு இன்றியமையாதது என்பதை நாம் எல்லாரும் அறிந்திருக்கிறோம், சிறிய பனிக்கட்டி முதல் பெரிய நீரருவிகள் வரை, ஏரிகள், நதிகள் முதல் பெருங்கடல்கள் வரை நாம் தண்ணீரின் அழகு மற்றும் அதன் எளிமையைக் கண்டு வியக்கின்றோம் என்றும் கூறினார்.

அறிவியல் ஆய்வுக்கு, ஆழ்ந்த அர்ப்பணிப்பு தேவைப்படுகின்றது, சில நேரங்களில் இது நீண்டதாயும், சோர்வை அளிக்கவல்லதாயும் உள்ளது, அதேநேரம், இவ்வாய்வு, ஆழமான மகிழ்வின் ஊற்றாக இருக்கின்றது என்றும் தெரிவித்த திருத்தந்தை, அறிவியல் ஆய்வாளர்கள், உள்ளார்ந்த மகிழ்வை அனுபவித்து, அம்மகிழ்வு அவர்களின் பணிக்குத் தூண்டுதலாக அமைய வேண்டுமெனத் தான் செபிப்பதாகக் கூறினார்.

1891ம் ஆண்டு திருத்தந்தை 13ம் சிங்கராயர் அவர்களால், வத்திக்கான் வானிலை ஆய்வு மையம் உருவாக்கப்பட்டதையும் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இயங்கும் முறை நம்மை வியப்பில் ஆழ்த்தி, படைத்தவராம் இறைவனிடம் அதிகமாக நம்மை அழைத்துச் செல்கின்றது  என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.