2016-06-11 17:07:00

இந்தியாவில் ஹான்சன் நோயாளர்க்கு இன்னும் பாகுபாடுகள்


ஜூன்,11,2016. இந்தியாவில் ஹான்சென் ஒழிப்புக்கு இலட்சக்கணக்கில் செலவு செய்யப்பட்டிருப்பினும், அந்நோயால் தாக்கப்பட்டுள்ளவர்கள் இன்னும், பாகுபாடுகளை எதிர்நோக்குகின்றனர் என்று, வத்திக்கான் கருத்தரங்கில் உரையாற்றிய அருள்பணியாளர் அற்புதம் அருள்சாமி அவர்கள் கூறினார்.

Hansen நோயால் தாக்கப்பட்ட மக்களுக்கு உடல் உள்ள குணமளித்தல், அவர்களின் மாண்பை மதித்தல் என்ற தலைப்பில், இவ்வெள்ளியன்று நிறைவடைந்த இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கில், இந்திய கத்தோலிக்க நலவாழ்வு கழகத்தின்(CHAI) பிரதிநிதியாகப் பங்கேற்று உரையாற்றிய அருள்பணி அற்புதம் அருள்சாமி அவர்கள் இவ்வாறு கூறினார். இப்பன்னாட்டுக் கருத்தரங்கில், ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவர் பி.கே. கோபால் அவர்களும் கலந்துகொண்டு, ஹான்சென் ஒழிப்பில் இந்து மதத்தின் பங்கு பற்றி உரையாற்றினார்.

இந்தியாவில், இந்நோயாளரைக் குணப்படுத்தும் பணியில் ஏராளமான அருள்சகோதரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும், 2011ம் ஆண்டில் உலக அளவில் இந்நோயால் புதிதாகத் தாக்கப்பட்டவர்களில் 58 விழுக்காடு இந்தியாவில் இடம்பெற்றது என்றும் கூறினார் அருள்பணி அற்புதம்.

நிதிப் பிரச்சனை காரணமாக, பல நோயாளர்கள் சாலைகளில் வாழ்கின்றனர் என்றும், இவர்களின் உரிமைகளுக்காக, இந்திய கத்தோலிக்கத் திருஅவை அதிகமாக உழைக்கின்றது என்றும் தனது உரையில் தெரிவித்தார் அருள்பணி அற்புதம்.

இந்தோனேசியாவில், ஒவ்வோர் ஆண்டும், ஏறத்தாழ இருபதாயிரம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும், தொழுநோய் என்ற சொல் பயன்படுத்துவதைத் தவிர்த்து, ஹான்சென் நோய் என்று கூறவேண்டுமெனவும் இந்தக் கருத்தரங்கில் கூறப்பட்டது. 

Nippon அமைப்பு, நல்ல சமாரியர் அமைப்பு, Raoul Follereau அமைப்பு, Sovereign Order of Malta, Sasakawa நினைவு நலவாழ்வு மையம் போன்றவற்றுடன் இணைந்து, திருப்பீட நலவாழ்வுத் துறை நடத்திய இப்பன்னாட்டுக் கருத்தரங்கில் 45 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.