2016-06-10 15:55:00

புனித மகதலா மரியாவின் நினைவு, விழா நாளாக உயர்வு


ஜூன்,10,2016. திருவழிபாட்டில், புனித மகதலா மரியாவின் நினைவு நாளை, விழா நாளாகச் சிறப்பிப்பதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தீர்மானித்துள்ளார் என, இவ்வெள்ளியன்று, திருவழிபாடு மற்றும் அருளடையாளத் திருப்பேராயம் அறிவித்தது.

இயேசுவின் திருஇதயப் பெருவிழாவான இம்மாதம் 3ம் தேதி இந்த விதிமுறை கையெழுத்திடப்பட்டது. இந்த மாற்றம் குறித்து அறிவித்த, திருவழிபாடு மற்றும் அருளடையாள திருப்பேராயச் செயலர் பேராயர் Arthur Roche அவர்கள், இப்படித் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பது, பெண்களின் மாண்பு, புதிய வழி நற்செய்தி அறிவிப்பு, இறைஇரக்கப் பேருண்மையின் மகிமை ஆகியவற்றை மிகவும் ஆழமாகச் சிந்திப்பதற்காகவே என்று கூறியுள்ளார்.    

புனித மகதலா மரியா, இயேசுவின் உயிர்ப்புக்கு முதல் சான்று மற்றும் இவரே, திருத்தூதர்களுக்கு இயேசுவின் உயிர்ப்பை அறிவித்தவர் என்று கூறியுள்ள பேராயர் Roche அவர்கள், புனித மகதலா மரியா, நற்செய்திக்கு உண்மையான மற்றும் உறுதியான ஓர் எடுத்துக்காட்டு எனவும், இயேசுவின் உயிர்ப்பின் மகிழ்வான மையச் செய்தியை அறிவித்த நற்செய்தியாளர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்துவின் மீது மிகுந்த அன்பைப் பொழிந்த மற்றும் கிறிஸ்துவால் அதிகம் அன்புகூரப்பட்ட புனித மகதலா மரியா அவர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, திருத்தந்தை, இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், இத்தீர்மானத்தை எடுத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார் பேராயர் Roche.

புனித மகதலா மரியா, இயேசுவின் உயிர்ப்பை திருத்தூதர்களுக்கு அறிவித்தவர், திருத்தூதர்கள், அதை உலகுக்கு அறிவித்தனர் என்பதால், இப்புனிதர், "திருத்தூதர்களின் திருத்தூதர்(Apostolorum Apostola)" என, புனித தாமஸ் அக்குய்னாஸ் குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டுகின்றது பேராயரின் அறிக்கை.

எனவே புனித மகதலா மரியா அவர்களின் நினைவு நாளை, விழாவாகத் திருவழிபாட்டில் சிறப்பிப்பது சரியானதே எனவும் குறிப்பிட்டுள்ளார் பேராயர் Roche.

திருஅவையின் நவீன திருவழிபாட்டு நாள்காட்டியில், புனிதர்களின் விழா, நினைவு நாளாக, விழாவாக அல்லது பெருவிழாவாகச் சிறப்பிக்கப்படுகின்றது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.