2016-06-10 15:48:00

கிறிஸ்தவ சபைகள் பணிகளில் இணைந்து பணியாற்ற அழைப்பு


ஜூன்,10,2016. குணப்படுத்தலையும், விடுதலையையும் வழங்கி, அமைதியில் வாழச் செய்யும் ஓர் ஆன்மீகத்தை இக்கால மக்கள், திருஅவையில் கண்டு கொள்ளாவிடில், அவர்களின் வாழ்வு, உண்மையான மனிதம் நிறைந்ததாகவோ அல்லது கடவுளை மகிமைப்படுத்துவதாகவோ அமையாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

உலக சீர்திருத்த கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் தலைவர்கள் பத்துப் பேரை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இக்கூட்டமைப்புக்கும், திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைக்கும் இடையே அண்மையில் நிறைவடைந்த நான்காவது இறையியல் உரையாடல் அறிக்கை பற்றிய மகிழ்வையும் தெரிவித்தார்.

ஏற்புடைமை மற்றும் அருளடையாள வாழ்வு பற்றிய இந்த அறிக்கை, ஏற்புடைமைக்கும், நீதிக்கும் இடையே இருக்க வேண்டிய தொடர்பைத் தெளிவாக வலியுறுத்துகிறது என்று கூறிய திருத்தந்தை, ஏற்புடைமை கோட்பாட்டு உடன்பாட்டின் அடிப்படையில், கடவுளின் இரக்கமுள்ள அன்புக்குச் சான்று பகரும் முறையில், சீர்திருத்த சபையினரும், கத்தோலிக்கரும் சேர்ந்து செய்யக்கூடிய பல துறைகள் உள்ளன என்றும் கூறினார்.

இக்காலத்தில், குறிப்பாக, கடவுள் இல்லாததுபோல் மக்கள் வாழ்ந்துவரும் இடங்களில், ஓர் ஆன்மீகப் பாலைநிலத்தை அடிக்கடி நாம் அனுபவித்துவரும்வேளை, சந்திப்பு, ஒருமைப்பாடு, நம்பிக்கை மற்றும் அன்புப் பிரசன்னத்தை வழங்குவதன் வழியாக, இவ்விடங்களில் தாகத்தைத் தணிக்கும் உயிருள்ள தண்ணீரின் ஊற்றுகளாக, கிறிஸ்தவச் சமூகங்கள் வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளன என்றும் திருத்தந்தை கூறினார்.

வாழ்வில் செயல்படுத்தப்படாமல் விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்ள இயலாது என்றும் உரைத்த திருத்தந்தை, ஒருவர் தன்னைப் பற்றியும், தனது தேவைகள் பற்றியுமே கருத்தாய் இருக்கும் ஒருவித ஆன்மீக நுகர்வுத்தன்மை ஊக்குவிக்கப்படுவதையும்   காண முடிகின்றது என்றும் உரைத்தார்.

இந்தச் சந்திப்புக்கு நன்றியும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சந்திப்பு முழு ஒன்றிப்பை நோக்கிய பயணத்தில் உறுதியாய் இருக்கிறோம் என்பதன் தெளிவான அடையாளமாய் இருப்பதாக என்று இறுதியில் கூறினார்.

உலக சீர்திருத்த கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பில், ஏறத்தாழ எட்டு கோடிப் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.