2016-06-10 16:20:00

எய்ட்ஸ்க்கான 80% மருந்து இந்தியாவில் தயாரிப்பு


ஜூன்,10,2016. உலக நாடுகளில் எய்ட்சுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் 80 விழுக்காடு மருந்துகள் இந்தியாவில் தயாரானவைதான்’என மத்திய நலவாழ்வு, குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வில் நடைபெற்ற எச்.ஐ.வி, எய்ட்ஸ் தொடர்பான கருத்தரங்கில் பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா அவர்கள், இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு எய்ட்ஸ் நோய் அச்சுறுத்தல் நாட்டையே பயமுறுத்தியது. ஆனால் இந்தச் சவாலை இந்தியா வெற்றிகரகமாக எதிர்கொண்டு அதைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என்றார்.

உலக நாடுகளில் எய்ட்சுக்கான மருந்துகளில் 80 விழுக்காடு இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்களில் தயாரானவைதான். இவற்றின் விலை குறைவாக உள்ளது. ஆனால் சிறப்பான பலனை அளிக்கிறது. இதனால் உலக நாடுகளில், குறிப்பாக, வளர்ந்த நாடுகளில், இதை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்தார் அமைச்சர் ஜே.பி. நட்டா.

இந்தியாவில் எய்ட்சால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 2007ம் ஆண்டு முதல் இதுவரை 55 விழுக்காடு அளவுக்குக் குறைந்துள்ளது. இதுபோன்று 2000ம் ஆண்டில் இருந்து எய்ட்ஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கையும் 66 விழுக்காடு சரிந்துள்ளது. இந்த வியத்தகு மாற்றத்துக்கு கட்டுப்படியாகும் விலையில் மருந்துகளும், சிகிச்சையும் கிடைத்ததே காரணமாகும் என்று அமைச்சர் நட்டா ஐ.நா.வில் பேசினார்.

ஆதாரம் : தினகரன் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.