2016-06-10 16:09:00

ஆர்த்தடாக்ஸ் சபைகளின் பேரவைக்கு திருப்பீட பிரதிநிதிகள் குழு


ஜூன்,10,2016. கிரேக்க நாட்டின் தீவுகளில் மிகப் பெரியதும், புகழ்பெற்றதுமான Crete வில், இம்மாதம் 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறவிருக்கும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைகளின் பேரவைக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது பிரதிநிதி குழுவை அனுப்பவுள்ளார்.

ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைகள் மீது கொண்டிருக்கும் நன்மதிப்பின் அடையாளமாகவும், அச்சபைக்கு ஆதரவளித்து ஊக்குவிக்கும் விதமாகவும் திருத்தந்தை தனது பிரதிநிதி குழுவை அனுப்பவுள்ளார்.

கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களும், பிரதிநிதி குழுவை அனுப்புமாறு, திருத்தந்தைக்கு விண்ணப்பித்திருந்தார்.

திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch, அதன் செயலர் ஆயர் Brian Farrell ஆகிய இருவரும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைகளின் பேரவையில் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் 14 ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைகள் தனித்தனியாக இயங்குகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.