2016-06-09 16:11:00

நோயாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் யூபிலி நிகழ்வுகள்


ஜூன்,09,2016. இவ்வெள்ளி, சனி, ஞாயிறு (ஜூன்10,11,12) ஆகிய மூன்று நாள்களில், வத்திக்கானில் நடைபெறும் நோயாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் யூபிலி விழா நிகழ்வுகள் பற்றி, இவ்வியாழனன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் விளக்கினார், நற்செய்தியை புதிய வழியில் அறிவிக்கும் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா.

அண்மையில் சிறப்பிக்கப்பட்ட தியாக்கோன்கள்(மே,27-29), அருள்பணியாளர்கள்(ஜூன்,1-3) யூபிலி விழாக்கள் பற்றி முதலில் பேசிய பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள், இந்த இரக்கத்தின் யூபிலி ஆண்டில், யூபிலி நிகழ்வுகளுக்காக, கடந்த ஆறு மாதங்களில், 91 இலட்சத்துக்கு மேற்பட்ட திருப்பயணிகள் உரோமைக்கு வந்துள்ளனர் என்று அறிவித்தார்.

மேலும், ஜூன் 10, இவ்வெள்ளி மாலை 5 மணிக்குத் தொடங்கும் நோயாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் யூபிலி விழாவின் முதல் கட்டமாக, புனிதக் கதவு வழியாகச் செல்லும் நிகழ்வு இடம்பெறும்.

ஜூன் 11, சனிக்கிழமையன்று, “இரக்கம், மகிழ்வின் ஊற்று” என்ற தலைப்பில், பல்வேறு மொழிகளில் மறைக்கல்வி வழங்கப்படும். பார்வையிழந்தோர் மற்றும் கேட்கும் திறனை இழந்தவர்க்கென, அவர்கள் புரிந்துகொள்ளும் முறையில் மறைக்கல்வி வழங்கப்படும்.

ஜூன் 12, ஞாயிறன்று காலை 10.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த யூபிலித் திருப்பலியை நிறைவேற்றுவார்.

இவ்வியாழன் பத்திரிகையாளர் கூட்டத்தில், நற்செய்தியை புதிய வழியில் அறிவிக்கும் திருப்பீட அவையின் செயலர் மற்றும் நேரடிப் பொதுச்செயலரும் கலந்துகொண்டு யூபிலி பற்றி விளக்கினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.