2016-06-09 16:16:00

தொழுநோய்க்கும், இரக்கத்திற்கும் இடையே ஆழமான பிணைப்பு


ஜூன்,09,2016. தொழுநோய்க்கும், இரக்கத்திற்கும் இடையே ஓர் ஆழமான பிணைப்பு உள்ளது என்று, திருப்பீட நலவாழ்வு அவைத் தலைவர் பேராயர் Zygmunt Zimowski அவர்கள், இவ்வியாழனன்று தொடங்கியுள்ள தொழுநோய் பற்றிய பன்னாட்டு கருத்தரங்கிற்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.

உடல்நலம் காரணமாக இதில் பங்கு கொள்ள இயலா நிலையில் இருக்கிறார் பேராயர் Zimowski. மேலும், திருப்பீட நலவாழ்வு அவையும், பல்வேறு நிறுவனங்களும் சேர்ந்து நடத்தும் இக்கருத்தரங்கில் உரையாற்றிய, திருவழிபாடு மற்றும் அருளடையாள திருப்பேராயத் தலைவர் கர்தினால் ராபர்ட் சாரா அவர்கள், இயேசு தொழுநோயாளரைக் குணமாக்கியதன் வழியாக, அவர்கள் புதிய கண்களோடு நோக்க வைத்தார் என்றார்.   

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு கோடியாக இருந்த இந்நோயாளரின் எண்ணிக்கை, 1999ம் ஆண்டில் எட்டு இலட்சமாகக் குறைந்துள்ளது எனினும், தொழுநோய் இன்றும் ஒரு தழும்பாகவே உள்ளது என்றும் உரையில் கூறினார் கர்தினால் சாரா.

பிறரன்பும், இறைவனின் அன்பும், கிறிஸ்துவின் சதையாகிய துன்புறுவோரைத் தொடுகின்றது என்றும் கூறினார் கர்தினால் சாரா.

உரோம் அகுஸ்தீனியானம் பல்கலைக்கழகத்தில், “Hansen நோயாளர்க்கு உடல், உள்ள பராமரிப்பு, அவர்களின் மாண்பை மதித்தல்”என்ற தலைப்பில் தொடங்கியுள்ள தொழுநோய் பற்றிய இக்கருத்தரங்கில், 45க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, 230க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், தன்னார்வலப் பணியாளர்கள், வல்லுனர்கள் மற்றும் இந்நோயிலிருந்து குணமானவர்கள் கலந்து கொள்கின்றனர். இக்கருத்தரங்கு இவ்வெள்ளியன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.