2016-06-09 13:19:00

இது இரக்கத்தின் காலம் : நடப்பது ஒவ்வொன்றும் நன்மைக்கே


அரசர் ஒருவர் தனது அமைச்சருடன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். அச்சமயத்தில் ஒரு புலி அரசரைத் தாக்கியது. புலியோடு நடத்திய சண்டையில் அரசர் தனது ஒரு கைவிரலை இழந்து மிகுந்த வேதனைப்பட்டார். அதைப் பார்த்த அமைச்சர், ”நடப்பது எல்லாமே நமது நன்மைக்கே” என்றார். அரசருக்குக் கோபம் வரவே, அமைச்சரை அருகிலிருந்த வறண்ட கிணற்றில் தள்ளிவிட்டார். ”நடப்பது எல்லாமே நமது நன்மைக்கே” என்று சொல்லிக்கொண்டே கிணற்றில் விழுந்தார் அமைச்சர். பின்னர், தனியே காட்டில் நடந்து சென்றார் அரசர். சிறிது நேரத்தில் பழங்குடி இன மக்கள் குழு ஒன்று, அரசரைப் பிடித்து, அவரை நரபலி கொடுப்பதற்குத் தயாரானது. ஆனால் சற்று சிந்தித்த அந்தக் குழு, அரசரை விடுதலை செய்தது. பின்னர் அரசர் அமைச்சரிடம் வந்து அவரைக் கிணற்றிலிருந்து வெளியே தூக்கிக் காப்பாற்றினார். பின்னர், அமைச்சரிடம் அரசர், ”நடப்பது எல்லாமே நமது நன்மைக்கே” என நான் உன்னைத் தண்டித்தபோது எதற்காகச் சொன்னாய்? என்றார். அதற்கு அமைச்சர், அரசே, நீங்கள் ஒரு விரலை இழந்திருந்ததால்தான் நரபலியிலிருந்து தப்பித்தீர்கள். ஏனெனில், நரபலி கொடுக்கப்படும் மனிதரிடம் எந்த ஒரு குறைபாடும் இருக்கக் கூடாது. அதோடு, நான் உங்களோடு வந்திருந்தால், உங்களைவிட்டுவிட்டு, என்னை நரபலி கொடுத்திருப்பார்கள் என்றார். எனவே, அன்பர்களே, நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொன்றையும், நமது நன்மைக்காகவே நடக்கின்றது என்ற நேர்மறை எண்ணத்தோடு நோக்குவோம். 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.