ஜூன்,09,2016. அதிகப்படியான கண்டிப்பு நிலையை எச்சரித்த அதேவேளை, திருஅவைக்குள், இது அல்லது ஒன்றுமில்லை எனச் சொல்பவர்கள், மதத்தை எதிர்ப்பவர்கள், இவர்கள் கத்தோலிக்கர் அல்ல என்று இவ்வியாழனன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வியாழன் காலையில், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய, திருப்பலி மறையுரையில், இத்திருப்பலியின் நற்செய்தி வாசகத்தை(மத்.5,20-12) மையமாக வைத்துப் பேசிய திருத்தந்தை, கிறிஸ்தவ கருத்தியலின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார்.
திருஅவையில், தாங்கள் போதிப்பதற்கு எதிராக வாழ்கின்றவர்கள் ஏற்படுத்தும் தீமை குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, ஒருவர் ஒருவருக்கிடையே ஒப்புரவைத் தடைசெய்யும் இறுக்கமான கருத்தியல்களிலிருந்து தங்களை விடுவித்து வாழுமாறு கேட்டுக்கொணாடார்.
தனது சகோதரரிடம் சினங்கொள்பவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார் என்றும், தனது சகோதரரை அவமதிப்பது, தனது ஆன்மாவுக்கு ஓர் அடிகொடுப்பது போலாகும் என்றும், தான் போதிப்பதற்கு எதிராக வாழ்கின்ற திருஅவை மனிதர் துர்மாதிரிகையாய் இருக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
நம் மத்தியில் ஒப்புரவுடன் வாழ்வது, உடன்பாட்டின் ஒரு சிறிய புனிதத்துவம் என்றும் கூறிய திருத்தந்தை, வெளிவேடத்தை எவ்வாறு தவிர்த்து வாழ வேண்டுமென்று இயேசு கூறுகிறார் என்பதை விளக்கி, நம் மத்தியில் சண்டை சச்சரவுகளைத் தவிர்த்து உடன்பாட்டு வாழ்வில் நடக்க முயற்சிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |