2016-06-08 17:38:00

தொழுநோய் பற்றிய வத்திக்கான் பன்னாட்டு கருத்தரங்கு


ஜூன்,08,2016. தொழுநோய் இன்னும் ஒரு பிரச்சனையாக உள்ளவேளை, சமூக மற்றும் உடலளவில் பாதிக்கப்பட்டுள்ள இந்நோயாளரைப் பராமரிப்பதற்கு, இக்காலம் முதல், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, திருஅவை தொடர்ந்து தன்னை அர்ப்பணித்து வருகின்றது என்று, திருப்பீட அவை ஒன்று கூறியது.

திருப்பீட நலவாழ்வு அவையும், பல்வேறு நிறுவனங்களும் சேர்ந்து, “Hansen நோயாளர்க்கு உடல், உள்ள பராமரிப்பு, அவர்களின் மாண்பை மதித்தல்” என்ற தலைப்பில், இவ்வியாழன், இவ்வெள்ளி தினங்களில் (ஜூன்,9,10) வத்திக்கானில் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றை நடத்துகின்றன. இதில், 45க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, 230க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், தன்னார்வலப் பணியாளர்கள், வல்லுனர்கள் மற்றும் இந்நோயிலிருந்து குணமானவர்கள் கலந்து கொள்வார்கள்.

இக்கருத்தரங்கு குறித்து பத்திரிகையாளர் கூட்டத்தில் விளக்கிய, இத்திருப்பீட அவையின் செயலர் பேரருள்திரு Jean-Marie Mupendawatu அவர்கள், Hansenனின் நோய் என அழைக்கப்படும் தொழுநோயால் தாக்கப்பட்டுள்ள தனிநபர்கள் சமூகத்தில் ஒருங்கிணைக்கப்படுவதன் அவசியம் பற்றி வலியுறுத்தினார்.

இந்நோயை ஒழிப்பது, இந்நோய் குறித்த தகவல்களை வழங்குவது போன்றவைகளை ஊக்குவிப்பதும், இந்நோயாளரின் தற்போதைய நிலைமை குறித்து ஆய்வு செய்வதும் முக்கியம் என்றும் பேரருள்திரு Mupendawatu அவர்கள் கூறினார்.

தொழுநோய், பழங்கால நோயாக இருந்தபோதிலும், ஒவ்வோர் ஆண்டும் 2 இலட்சம் பேர் இதனால் புதிதாகத் தாக்கப்படுகின்றனர், 2015ம் ஆண்டில் மட்டும் 2,13,899 பேர் தாக்கப்பட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.