2016-06-08 16:12:00

இரக்கத்தின் தூதர்கள் – அருளாளர் அன்னை தெரேசா பாகம் 2


ஜூன்,08,2016. ஒருநாள், கொல்கத்தாவில், காலிகாட் பகுதி மக்களும், கோவில் அர்ச்சகர்களும் அந்தப் பகுதியின் காங்கிரஸ் தலைவரைச் சந்தித்தார்கள். அன்னை தெரேசா மதமாற்றம் செய்யத்தான் இப்படியெல்லாம் நாடகமாடுகின்றார், இவரை உடனடியாக இவ்விடத்தைவிட்டு விரட்ட வேண்டும் என்று புகார் கொடுத்தனர். ஒரு ஞாயிறு காலை. அன்னை தெரேசாவிடம் அந்த இடத்து மக்களின் புகாரைச் சொல்வதற்காகப் புறப்பட்டார் காங்கிரஸ் தலைவர். அவர் பின்னால், மதாபிமானிகளும் சென்றனர். அப்போது அன்னை தெரேசா அவர்கள், காலிகாட் தர்மசாலாவின் ஒரு முனையில், தொழுநோயால் துன்புற்ற ஒருவரின் உடலைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். துர்நாற்றம் நாசியைத் துளைத்தது. அங்கு நின்று கொண்டிருந்த அந்தக் கும்பலைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், அம்மனிதரை அக்கறையுடன் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள் அன்னை தெரேசா. காங்கிரஸ் தலைவர் வியப்பில் ஆழ்ந்தார். மனிதாபிமானம், மதாபிமானத்தை வென்றுவிட்ட தெய்வீகச் செயல் அல்லவா இது. எதுவுமே பேசாமல் திரும்பிவிட்டார் காங்கிரஸ் தலைவர். மதம் காக்கப் புறப்பட்ட கூட்டமும், அவர் பின்னால் சென்றது. அக்கூட்டத்திற்கு, நம்பிக்கை, அவநம்பிக்கையாக மாறிக் கொண்டிருந்தது. காங்கிரஸ் தலைவர் தன்னைப் பின்தொடர்ந்த கூட்டத்தைப் பார்த்து இப்படிச் சொன்னார்.

“அந்த இடத்திற்குச் செல்வதற்கு முன்னர் தெரேசா அம்மையாரை அந்த இடத்தைவிட்டு விரட்டி விடுவதாக நினைத்துத்தான் சென்றேன். உங்களுக்கும் வாக்குக் கொடுத்தேன். அதில் இப்பொழுதும் மாற்றம் இல்லை. அதற்கு முன்னர் உங்கள் எல்லாரிடமும் ஒரு வேண்டுகோள். உங்கள் தாய்மார்களும், சகோதரிகளும், தெரேசா அம்மையார் செய்துவரும் சேவையைத் தொடர முன்வந்தால், அந்த அம்மையாரை இங்கிருந்து அனுப்பிவிடுவது எனது பொறுப்பு..”

இவ்வாறு காங்கிரஸ் தலைவர் சொன்னதும் கூட்டம் கலைந்துபோய் விட்டது. மனிதாபிமானம், யாருடைய சொந்த சொத்தும் இல்லை. அது ஒவ்வொருவரின் இதயத்திலும் சுரக்க வேண்டியது. இதுதான் அருளாளர் அன்னை தெரேசா. இவர், இயற்கைத் தாயின் அழகைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் அல்பேனியா நாடு பெற்ற செல்வ மகள். இந்நாட்டில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை விண்ணை முட்டும் உயர்ந்த மலைகள். மலைகளின் அடிவாரத்தில் வளர்ந்தோங்கி நிற்கும் பெரிய பெரிய மரங்கள். வற்றாத நதிகள். சதுப்புநிலக் கடற்கரைகள். இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு. இந்நாட்டில், செகாப்ஜி என்னும் கிராமத்தில், வேளாண் குடும்பத்தில் 1910ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி பிறந்தவர் அன்னை தெரேசா. இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் ஆக்னஸ் கான்ஷா போஜாஷு. இவரின் பெற்றோர்க்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன். இவரின் பெற்றோர் விவசாயப் பண்ணை ஒன்றில் வேலை செய்து வந்தனர்.

தனது ஆரம்பக் கல்வியை அரசுப் பள்ளியொன்றில் படித்த அன்னை தெரேசா அவர்கள், இளவயதிலே, தங்களின் சொந்த நாட்டைவிட்டு வேறு நாடுகளில் கிறிஸ்துவை அறிவிக்கும் மறைப்பணியாளர் பற்றி அறிந்தார். இந்தியா சென்று, இந்திய மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும், இயேசுவின் உயரிய மதிப்பீடுகளை இந்திய மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார். பன்னிரண்டு வயது நடந்தபோது, இப்படியோர் ஆசை. அந்த வயதில் தனக்கு ஏற்பட்ட ஆசை பற்றி இப்படிச் சொல்கிறார் அன்னை தெரேசா.

“என் வாழ்க்கைப் பாதையின் வரைமுறையை நிர்ணயித்துக் கொள்ள பன்னிரண்டு வயது என்பது அறியாப் பருவம் அல்ல. அன்பு காட்டவும், தொண்டுபுரியவும் துடிக்கின்ற இதயத்துக்கு வயது ஒரு பிரச்சனையல்ல. திருமணம் செய்யக் காத்திருக்கும் கன்னிப்பெண் போன்று, என் இலட்சியங்களுக்காக என்னையே அர்ப்பணம் செய்யத் துடித்துக் கொண்டிருந்தேன். அதற்கான இயேசுவின் அருளுக்காக ஏங்கிக் காத்திருந்தேன்…”

இப்படிச் சொல்லியுள்ள அன்னை தெரேசா, பள்ளியில் படித்தபோதே, சொடாலிட்டி என்ற மாதா பக்த சபையில் சேர்ந்திருந்தார். அச்சமயத்தில் வங்களாத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் வறுமையாலும், கொள்ளை நோயாலும் வாடித் தவித்தனர். முன்னாள் யூக்கோஸ்லாவியாவிலிருந்த இயேசு சபை அருள்பணியாளர்கள் இந்தியர்களுக்குச் சேவையாற்ற இசைவு தெரிவித்தனர். அவர்களில் முதல் குழு, 1925ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி கொல்கத்தா வந்தடைந்தது. இந்த இயேசு சபை அருள்பணியாளர்களில் ஒருவர் கர்சியாங்கிற்கு அனுப்பப்பட்டார். அவர் அங்கிருந்து அல்பேனியாவுக்கு அனுப்பிய கடிதங்கள், வங்களாத்தில் கிறிஸ்துவ மறைப்பணியாளர்கள் ஆற்றும் பணிகளை விவரித்தன. அன்னை தெரேசா சேர்ந்திருந்த மாதா சபையிலும் இக்கடிதங்கள் வாசிக்கப்பட்டன. இவை, இந்தியாவுக்குச் சென்று சேவையாற்ற வேண்டுமென்ற ஆவலை, அன்னை தெரேசாவிடம் மேலும் அதிகரித்தன.

இளமைப் பருவத்தில் நீங்கள் வயதுவந்தவராக இருங்கள் என்கிறார் வால்டர் ஸ்டேபிள்ஸ். இளமையிலே வயதுவந்தவரின் சிந்தனை, ஒரு குறிக்கோள், அளவற்ற ஊக்கம், தளர்வற்ற நெஞ்சுறுதி, சோர்வில்லாத உழைப்பு, நேர்மையான பாதை.. இவை கொண்ட அன்னை தெரேசாவுக்கு, வெற்றி கிடைக்கமாலா போகும். அன்பர்களே, கொல்கத்தா அருளாளர் அன்னை தெரேசா வாழ்வு பற்றித் தொடர்ந்து கேட்போம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.